'பாஸ், சென்னை'னா என்னன்னு கேட்டா இத சொல்லுங்க'... 'குஜராத் சிறுமிக்கு சர்ப்ரைஸ்'... ஆனந்த கண்ணீர் வடித்த குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 20, 2020 10:50 AM

ஊரடங்கு காரணமாகக் காப்பகத்தில் தங்கியுள்ள குஜராத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு, சென்னை மாநகராட்சி கொடுத்துள்ள சர்ப்ரைஸ், பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Chennai Corporation officials surprise Patna Girl on birthday

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், ஆன்மீக சுற்றுலாவிற்காகக் கடந்த மார்ச் 21 அன்று ரயில் மூலம் சென்னை சென்ட்ரலில் வந்திறங்கினார்கள். அதில் 11 வயது சிறுமி ஷிருஷ்டியும் ஒருவர். இந்த சூழ்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர்களால் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட சென்னை மாநகராட்சி, காப்பகங்களில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

சென்னை கிண்டியில் உள்ள காப்பகத்தில், ஷிருஷ்டியின் குடும்பத்தினர் உட்பட 74 பேர் தங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஷிருஷ்டிக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அதனைக் கொண்டாட முடியவில்லையே எனச் சோகத்தில் இருந்துள்ளார். வருடந்தோறும் நண்பர்கள், மற்றும் சொந்தங்களோடு பிறந்த நாளை கொண்டாடும் ஷிருஷ்டி, இந்த வருடம் அது நடக்காமல் போனதால் அவளை அவரது குடும்பத்தினர் ஆறுதல் படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் ஷிருஷ்டியின் பிறந்தநாளைக் கேள்விப்பட்டு உடனடியாக கேக் ஆர்டர் செய்த மாநகராட்சி அதிகாரிகள், காப்பகத்தில் தங்கியிருந்த ஷிருஷ்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள். தனக்காக கேக் வாங்கி கொடுத்த அதிகாரிக்கு முதல் கேக்கை கொடுத்து பதில் நன்றி செய்தார் ஷிருஷ்டி. சோகத்திலிருந்த சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, அவரின் பிறந்த நாளை கொண்டாடிய சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.