'மாமூல்' வாங்குனா இதுதான் நடக்கும்...'கலங்கடித்த 'டி.ஜி.பி திரிபாதி'...'போலீசாருக்கு கடும் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Aug 07, 2019 04:18 PM
தமிழக காவல்துறையின் டி.ஜி.பி'யாக திரிபாதி பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக ‘ஹெல்மெட்’ அணியாத போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் எச்சரிக்கை தெரிவித்து சுற்றறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்லும் போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

இதையடுத்து வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்றும், நன்கொடைகள், வெகுமதிகள், பரிசு பொருட்கள் போன்றவை வாங்குவதும் சட்டப்படி குற்றமாக கருதப்படும் என்றும், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார். இதனைத்தொடர்ந்து தற்போது அவர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் ''கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்களிடம் இருந்து மாமூல் வாங்குவது கடுமையான குற்றமாக கருதப்படும். இதனை சாதாரணமான குற்றமாக கருத முடியாது. எனேவ இதுபோன்ற புகார்கள் வரும்போது, அந்த புகார்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
