'நாங்க உயிரோட இருக்கும் போதே... இப்படியெல்லாம் பேசாதீங்க!'... வதந்திகளால் மனமுடைந்த கொரோனா நோயாளியின்... மனதை உருக்கும் கோரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு வீடியோ பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவரின் மகனுக்கு, சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியுள்ளன. இதையடுத்து அவர் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, " நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக செய்திகள் நேற்று வெளியாகின. இது கேட்பதற்கு மிகவும் கசப்பாக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எங்களுக்கு இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது எனது பெற்றோர் மற்றும் உறவினர்களை வெகுவாக பாதிக்கிறது. என்னுடய இறப்பை பற்றி எனது உறவினர்களிடம் பலர் விசாரிக்கிறார்கள். எனவே, நான் எனது ஊடக நண்பர்களிடம் வேண்டிக் கேட்டுகொள்வது என்னவெனில், தயவு செய்து நீங்கள் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதை உறுதிசெய்யுங்கள்" என்றார்.
மேலும், தன்னைப் போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடையவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.