VIDEO: "பொதுமக்கள ஏன் சார் அடிக்குறீங்க?... கமல் வீட்ல ஏன் நோட்டீஸ் ஒட்டுனீங்க?... கொரோனா டெஸ்ட் சரியா எடுக்குறீங்களா?"... அமைச்சர் ஜெயக்குமாருக்கு சரமாரி கேள்விகள்... அனல் பறக்கும் விவாதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 29, 2020 01:25 PM

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் Behindwoodsக்கு கொடுத்த பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

behindwoods exclusive interview with minister jayakumar

மக்கள் மத்தியில் நிலவும் பல்வேறு கேள்விகளுடன், மிகுவும் காரசாரமான விவாதத்தின் தொகுப்பு பின்வருமாறு:-

"ஊரடங்கு என்பது சரி தான். ஆனால் இதனைப் பயன்படுத்தி காவல்துறையினர் பொதுமக்களிடம் அத்துமீறுவதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்களே?" என்று கேட்டபோது,

"யாருக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது? மக்களுக்காக. கொரோனா வைரஸ் பரவலில் 3 நிலைகள் உள்ளன. அடுத்த கட்டத்திற்கு நாம் சென்றுவிடாமல், ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு சமூக இடைவெளி என்பது முக்கியம். இது குறித்து உலகளாவிய அளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் வேகமாகப் பரவக் கூடிய வாய்ப்பு இருப்பதால், அந்த அபாயத்திலிருந்து குடிமக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை அல்லவா? ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் இருக்கும் போது, சிலர் மட்டும் எதற்காக சுற்றித்திரிய வேண்டும்?" என்று அமைச்சர் பதிலளித்தார்.

"பால், பருப்பு, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் செல்வோர்களை காவலர்கள் ஏன் தாக்குகிறார்கள்? மருத்துவர்களைக் கூட தாக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றனவே?" என்ற கேள்விக்கு,

"தகுந்த காரணங்களுக்காக வெளியே செல்வோர்கள் அடிவாங்குவதில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்வோர்கள் தாக்கப்படுவதில்லை. மருத்துவர்கள் தாக்கப்படுவதில்லை. ஒரு சில இடங்களில், தவறுகள் நடந்திருக்கலாம். எனினும், அது தவறு தான். அதை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. மேலும், காவலர்களுக்கு தற்போது அதுகுறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கை மீறியதற்காக 8 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் சமூக பொறுப்பை உணர வேண்டும் அல்லவா? தமிழ்நாட்டில் 7 கோடி பேர் உள்ளனர். அனைவரும் வீட்டில் உள்ளனர். ஆனால், இவர்கள் மட்டும் ஏன் அரசின் உத்தரவை மீற நினைக்கிறார்கள்? இது போன்ற நபர்களால், அவர்களுக்கு மட்டும் சிக்கல் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்திற்கே அது பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சமூக வலைதளங்களை அதிகமான அளவில் தவறாக பயன்படுத்தி, சமுதாயத்தை பலர் கெடுத்து வருகின்றனர். அவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதற்காக, 27 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், குண்டர் சட்டத்தில் கூட கைது செய்வோம்" என்றும் கூறினார்.

"சமூக வலைதளங்களில் வதந்திகள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. அரசாங்கம் அதைத் தடுக்க முன்னதாகவே நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில், வதந்திகள் பரவிய பின்பு, கைது செய்வது சரியா?" என்ற கேட்டபோது,

"சைபர் க்ரைமிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாகவே, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்." என்றார்.

"மீன்கள் மூலம் கொரோனா பரவுவதாக வதந்திகள் பரவுகின்றன. அது குறித்து எதாவது தகவல் உள்ளதா?" என்ற கேள்விக்கு,

"அது முற்றிலும் தவறான கருத்து. புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல்கள் எழுந்துவருகின்றன. மீன், முட்டை, கோழி, மட்டன் போன்ற அசைவ உணவுகளை இந்த மாதிரியான நேரத்தில் தாராளமாக உண்ணலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது போன்ற உணவுகள் உதவும் என்பதால், நாம் இவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார்.

"கொரோனா தொற்று பரிசோதனைகள் தமிழகத்தில் குறைவாக எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளதே?"

"வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை நாம் தனிமைப்படுத்தியுள்ளோம். சென்னையில் மட்டும் 24,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தகுந்த பரிசோதனை செய்து வருகிறோம். வேண்டிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். போதிய மருத்துவ உபகரணங்கள் உள்ளன. மக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை" என்று தெரிவித்தார்.

"ஏன் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது? பின்னர் ஏன் அகற்றப்பட்டது?" என்ற வினவியதற்கு,

"அதுபற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால், தன்னை தானே சுய தனிமை செய்து கொண்டதாக கமல் அவர்கள் தெரிவித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன்" என்றார்.

இறுதியாக அவர் பேசுகையில், "இந்த வைரஸ் என்பது மின்னல் வேகத்தில் பரவக்கூடிய அபாயகரமான உயிர்க்கொல்லி நோய். ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரால் 10 லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் இந்த வைரஸுக்கு உள்ளது. இந்த சங்கிலி தொடரை நாம் உடைக்கவேண்டும். அதற்காகத்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதை உணர்ந்து பொது மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று கூறி நிறைவு செய்தார்.