இந்த 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம்.. வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்றும் நாளையும் (புதன் மற்றும் வியாழக் கிழமை) நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் அரபி கடல் அருகே அமைந்துள்ள மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மத்திய இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இன்றும் (புதன் கிழமை) நாளையும் (வியாழக் கிழமை) நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மழை
இந்நிலையில், தேதி வாரியாக தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 8
தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.