"இனி அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பொருத்தினா.." - சென்னை காவல் ஆணையர் வைத்த செக்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒலி மாசுபாட்டை குறைக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் அதனை பொருத்தி தரும் மெக்கானிக்குகள் மீது வழக்கு பதியப்படும் என சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிகமானோர் ஹாரன்களை உபயோகிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் ஒலி மாசுபாடு ஏற்படுவதோடு பல்வேறு சிக்கல்களையும் மனிதர்கள் சந்தித்து வருகின்றனர். இதனை சமாளிக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ஒலி மாசு விழிப்புணர்வு வாரம் என்னும் திட்டத்தை துவக்கியுள்ளனர். இதன்மூலம் இன்று முதல் ஜூலை 3 ஆம் தேதிவரையில் ஒலி மாசுபாடு குறித்து பல்வேறு விழுப்புணர்வு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர் சென்னை போக்குவரத்து காவல்துறையினர்.
ஒலி மாசுபாடு விழிப்புணர்வு வாரம்
சென்னை அசோக் பில்லர் அருகே இன்று காலை நடைபெற்ற ஒலி மாசுபாடு விழிப்புணர்வு வார திட்டத்தை துவங்கிவைத்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால் ஒலிபெருக்கி விழிப்புணர்வு லோகோ மற்றும் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்துக் கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சரத்கர், இணை ஆணையர் ராஜேந்திரன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய துணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால்," ஒலி மாசுபாட்டை குறைப்பது குறித்து கையெழுத்து இயக்கம், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி அளித்தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. ஒலி மாசுபாடு விழிப்புணர்வு குறித்து பள்ளிகளில் ஓவியப்போட்டி நடத்தப்பட இருக்கின்றன. சென்னையில் உள்ள 100 டிஜிட்டல் பலகைகளுக்கு சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதன்மூலம் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை பயன்படுத்துதல் மற்றும் ஒலி மாசுபாடு குறித்து இந்த டிஜிட்டல் பலகைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒளிபரப்பப்படும்" என்றார்.
வழக்கு
சென்னையில் ஒலிமாசுபாடு ஏற்படுத்துவோருக்கு அபராத தொகை அதிகரிப்பது குறித்துப் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால்," ஒலி மாசு தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குகளை அதிகளவில் பதியவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒலி மாசு கண்டறியவதற்காக நவீன கருவி வாங்க உள்ளோம். தற்போது அதிக ஹாரன் ஒலி எழுப்பியதாக குறித்து ரூ. 100 அபராதம் விதித்து வருகிறோம். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்தால் ரூ. 1000, ரூ. 2000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது" என்றார்.
மேலும், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை பொருத்தி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்த அவர்,"அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை தயாரித்து வாகனங்களில் பொருத்தி தரும் மெக்கானிக்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். ஹாரன், சைலென்சர் ஆகியவற்றில் ஒலி மாசு எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதனை ஆய்வு செய்ய உள்ளோம். இதன் பிறகே போக்குவரத்து போலீசார் எதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளனர் என்பது தெரியும்" என்றார்.

மற்ற செய்திகள்
