அடடே இந்த ஐடியா செம்மயா இருக்கே.. காலி பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை கொடுத்தால் மாஸ்க் கொடுக்கும் மெஷின்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை ரயில்வே நிலையத்தில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை போட்டு, மாஸ்க் பெற்றுக்கொள்ளும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இது உள்ளூர் மக்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள்
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளால் பல தாக்கங்களை மனிதர்கள் சந்தித்து வருகிறார்கள். கழிவு மேலாண்மையை மேம்படுத்த உலக நாடுகள் பலவும் போட்டிபோட்டுக்கொண்டு பணிபுரிந்து வருகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வசதியும் பயன்பாட்டுக்கு வந்தாலும், நடைமுறை சிக்கல்கள் காரணமாக அந்த திட்டம் மூலமாக குறைவான பிளாஸ்டிக் குப்பைகளை மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
இதற்கு முதல் காரணமாக சொல்லப்படுவது பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பது. ஊர்கள்தோறும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என கழிவு பொருட்கள் வகைப்படுத்தப்பட்டாலும் தெருக்களில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவும் கணிசமாகவே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோவை ரயில் நிலையத்தில் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
மாஸ்க் கொடுக்கும் இயந்திரம்
இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது 'டிராப் அண்ட் டிரா' எனப்படும் இயந்திரம் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதில் காலி பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை கொடுத்து, ஒரு மாஸ்க்கை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். மாஸ்க் தேவைப்படாதவர்கள் இலவசமாக தங்களது உடல் எடையை பரிசோதித்துக்கொள்ளலாம்.
இதன்மூலம், மக்களிடையே மாஸ்க் அணியும் பழக்கத்தை ஏற்படுத்திடவும், ரயில்வே நிலையத்தில் தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதை தடுக்கவும் முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.
மறுசுழற்சி
இந்த இயந்திரம் மூலமாக பெறப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் என்கிறது இந்த இயந்திரத்தை வடிவமைத்த டிராப் அண்ட் டிரா' ஸ்டார்ட்-அப் நிறுவனம். பிளாஸ்டிக் பாட்டில்களை பெற்றுக்கொண்டு மாஸ்க் அளிக்கும் இயந்திரத்தை மக்கள் ஆர்வத்தோடு பயன்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நோக்கில், குஜராத்தின் ஜூனாகத் பகுதியை சேர்ந்த உணவகம் ஒன்று பிளாஸ்டிக் குப்பைகளை பெற்றுக்கொண்டு உணவுகளை வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
