‘இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப்பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கு ஏதும் எச்சரிக்கை இல்லை என்று வானிலை மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
