'தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்!!!'... 'புரெவி புயலால்'... 'எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை???'... 'வெளியாகியுள்ள எச்சரிக்கை!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் கடந்த 24ஆம் தேதி நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க, அதன் தொடர்ச்சியாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது.
இதையடுத்து நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'புரெவி' எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்த புயல் பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மேலும் இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அத்துடன் புரெவி புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், குமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த அறிவிப்பில், "புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நாளை தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
