"பீச் மண்ணுல ஏதோ மின்னுது?!!"... 'ஓடிச்சென்று பார்த்தபோது கிடந்த தங்கமணிகள்!!!'... 'நிவர் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப்போன மக்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாநிவர் புயலுக்குப்பின் கரை ஒதுங்கிய தங்க மணிகளை பொதுமக்கள் அள்ளிச் சென்ற ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியதால் பலருடைய வாழ்விடங்களும் வெள்ளக்காடாய் மாறியுள்ளன. இந்த பாதிப்பிலிருந்து இயல்புநிலை திரும்ப சில வாரங்கள் ஆகலாமென எதிர்பார்க்கப்படும் சூழலில், இதுபோன்ற ஒரு பாதிப்பை ஏற்படுத்திய நிவர் புயல் ஒருபக்கம் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றையும் கொடுத்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடலோரப் பகுதியிலுள்ள சிறிய கிராமமான உப்படாவில் கடந்த வெள்ளிக்கிழமை காலை கடற்கரை பகுதியில் தங்கம் போல ஏதோ மின்னுவதை மீனவர் ஒருவர் பார்த்துள்ளார். அதுபற்றி அவர் உடனடியாக ஊர் மக்களிடம் கூற, அனைவரும் கடற்கரைக்கு வேகமாக ஓடி வந்துள்ளனர். அப்போது அங்கு சிறிய சிறிய உருண்டைகள் போன்ற மணிகளாக தங்கம் கிடைக்க, ஊர் முழுவதும் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
கடற்கரையில் திரண்ட மக்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் தலா ரூ 3,500 மதிப்பிலான தங்கத்தை எடுத்ததாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து வரும் அலைகளில் மேலும் தங்கம் கிடைக்குமென ஆர்வத்துடன் பல மணி நேரம் ஊர் மக்கள் அங்கேயே காத்துக் கிடந்துள்ளனர். இதையடுத்து இந்த தங்கமணிகள் எங்கிருந்து வந்தது என்பது பற்றி பேசியுள்ள உள்ளூர் போலீசார், "உப்படா கிராமத்தில் இருக்கும் கோயில்கள், ஏராளமான வீடுகள் கடல் நீரால் அரிக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் 150 ஏக்கர் நிலம் கடல் நீரால் மாயமாகி இருக்கிறது.
இந்தப் பகுதியில் வீடுகள் மற்றும் கோயில்கள் கட்டும் போதும் சிறிய அளவிலான தங்கத்தை அடித்தளத்தில் போட்டு பணிகளைத் தொடங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதுதான் கடல் அரிப்பால் தற்போது வெளியே வந்திருக்கக் கூடும். கடற்கரைக்குச் சென்ற அனைவருக்கும் தங்கம் கிடைக்கவில்லை. சிலருக்கு மட்டுமே அதிர்ஷ்டம் அடித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டிற்கு முன்பு உப்படாவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோனப்பா பேட்டாவில் புயலால் பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்ததாகவும், அதில் பழமையான நாணயங்கள் உட்பட பல்வேறு அரிய பொருட்கள் இருந்ததாகவும் கூறப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
