‘கழுத்தில் நல்லபாம்பு’!.. ‘கையில் சூலாயுதம்’!.. வைரலான யூடியூப் வீடியோ..! சிக்கிய காஞ்சிபுரம் பெண் சாமியார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 22, 2019 01:04 PM

கழுத்தில் நல்லபாம்பை சுற்றி சாமி ஆடியவாறு யூடியூடிப்பில் வீடியோ வெளியிட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Forest department officials arrest kanchipuram woman for snake

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வெள்ளரி அம்மன் கோயிலில் அருள் வாக்கு சொல்லி வருபவர் கபிலா. இவர் கடந்த ஆண்டு கோயில் கும்பாபிஷேகத்தின் போது இரண்டு நல்லபாம்புகளை வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் அந்த பாம்புகளுக்கு நாகபூஜை மற்றும் பாலாபிஷேகம் செய்துள்ளார். பூஜை முடிந்த கையோடு பாம்பாட்டியின் உதவியோடு பாம்பை தனது கழுத்தில் போட்டுள்ளார்.

பின்னர் அம்மன் அருள் வந்ததுபோல் கையில் சூலாயுதம், கழுத்தில் எலுமிச்சை மாலை அணிந்து நடனமாடியுள்ளார். இதனால் பக்தர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். இதனை கபிலா வீடியோவாக பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியுள்ளது. இதனால் என்ன செய்யலாம் என தனக்கு தெரிந்த நபர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

அப்போது சிலர் கோயில் தொடர்பான வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்தால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் தான் பாம்புடன் நடனமாடிய வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியுள்ளது. தகவலறிந்து கோயிலுக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் கபிலாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விளம்பர நோக்கத்துக்காக நல்லபாம்பு பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்திய வனவியல் சட்டத்தின் படி நல்லபாம்பை காட்சிப்படுத்துவது மற்றும் வணிக நோக்கத்துக்காக பயன்படுத்துவது குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #WOMAN #SNAKE #KANCHIPURAM #ARRESTED