“என் மேல பாசம்.. அவன் மேல காதல்.. என் பொண்ணு தவிச்சிருக்கா”.. கல்லூரி மாணவியின் அதிர்ச்சி முடிவால் கதிகலங்கிய தந்தை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஆவடியில் உள்ள ஸ்ரீதேவி நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த 45 வயதான இளங்குமரன் என்பவர் ஹெச்.வி.எஃப்பில் பிட்டராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் 43 வயதான இவரது மனைவிக்கும் சாந்தகுமாரிக்கும் 19 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தம்பதியின் மகள் திவ்யா, சென்னை போரூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இளங்குமரனுக்கும் சாந்தகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட சூழலில் குடும்பத்தை விட்டு சாந்தகுமாரி பிரிந்து சென்றுவிட, இளங்குமரனும் அவரது மகளும் மட்டும் ஆவடியில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் திவ்யா தனியாக இருக்க விரும்பியதால் அவரை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பெண்கள் விடுதியில் இளங்குமரன் சேர்த்துள்ளார். அங்கு தங்கியிருந்த திவ்யா அவ்வப்போது வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார். இப்படி ஊரடங்கையொட்டி ஜூன் 18ஆம் தேதி விடுதியிலிருந்து வீட்டுக்கு சென்ற திவ்யா மீண்டும் ஜூலை 1-ஆம் தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த நாட்களில் திவ்யா செல்போனில் ஆண் நண்பருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த இளங்குமரன் மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அப்பா அறிவுரை வழங்கியதும் திவ்யா, “அப்பா நீங்கள் சொல்வதை போலவே நடந்து கொள்கிறேன்” என்றே பதிலும் கூறியுள்ளார். அதன் பின்னர்தான் ஜூலை 2-ஆம் தேதி விடுதியில் இருந்து இளங்குமரனுக்கு வந்த போன் அழைப்பில் பேசிய, விடுதி நிர்வாகி திவ்யா 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டதாகவும் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லியும் கூறியிருந்தார். மருத்துவமனையில் திவ்யாவின் உடல்நிலை மோசமானதை அடுத்து பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு திவ்யாவை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து திவ்யாவின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மூலம் திவ்யாவின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுபற்றி திவ்யாவின் தந்தை இளங்குமரன், காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தன் மகள் தான் நேசித்து வந்த நபரை மறக்க முடியாமலும், தன் மீது உள்ள பாசத்தாலும், தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாகவும், இதனால்தான் இந்த விபரீத முடிவை எடுத்து மாடியிலிருந்து குதித்து திவ்யா இறந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் போலீசார் இது பற்றி பேசும்போது மாணவி திவ்யாவிடம், அவருடன் போனில் பேசிய அந்த நபரிடம் திவ்யா பேசக்கூடாது என்று இளங்குமரன் கண்டித்ததால், திவ்யாவும் பேசாமல் இருந்ததாகவும் தனியாக விடுதியில் இருந்த அவர் 3-வது மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரின் விடுதியை ஆய்வு செய்த போது எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் திவ்யாவின் கால் ஹிஸ்டரியை ஆய்வு செய்த போது தொடர்ச்சியாக குறிப்பிட்ட நம்பருக்கு நீண்ட நேரம் அவர் போன் பேசி வந்தது தெரிய வந்துள்ளதாகவும் அந்த நபரிடம் திவ்யாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.