"சாகும்போது கூட... ட்யூட்டிய பாத்துக்கிட்டே தான்யா உசுர விட்டாரு...!" - 'கடைசி' நிமிஷத்திலும் 'க்ளூ' கொடுத்து, கொலையாளிகள பிடிக்க உதவிய 'கான்ஸ்டபிள்'! - நெகிழ வைக்கும் 'சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில், பணியில் இருந்த இரண்டு போலீசாரை ஒரு கும்பல் சில தினங்களுக்கு முன் சுட்டுக் கொன்றது.
முன்னதாக, அப்பகுதியிலுள்ள காவல் நிலையம் அருகே காரில் இருந்த சிலர், மது அருந்தி கொண்டிருந்த நிலையில், பணியில் இருந்த இரண்டு போலீசார்கள், அவர்களிடம் அதுகுறித்து விசாரித்த போது, போலீசாருக்கும், காரில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தகராறு ஏற்பட்ட நிலையில், காரில் இருந்த நபர்கள், இரு போலீசாரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி விட்டு காரிலேயே தப்பித்துச் சென்றுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குற்றவாளிகளின் விவரம் எதுவும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், உயிரிழந்த கான்ஸ்டபிள் ரவீந்தர் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த போது அவரது கையில் வாகன எண் ஒன்று இருந்துள்ளது. அதனைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இரண்டு காவலர்களை கொன்று விட்டு காரில் தப்பித்து சென்ற நபர்களின் வாகன எண் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணை மூலம் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர்.
'உயிர் போகும் நேரத்தில் கூட, குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டி வண்டி நம்பரை தனது கையில் குறிப்பிட்ட போலீசின் தன்மை நெகிழ வைக்கிறது. அந்த வாகன எண் கிடைக்கவில்லையென்றால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க துப்பு இல்லாமல் அவதிப்பட்டு இருப்போம்' என ஹரியானா மாநில தலைமை காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், ரவீந்தர் சிங்கின் பெயர் பதக்கத்திற்காக பரிந்துரைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர் போகும் தருவாயில் கூட பணிக்கு வேண்டி செயல்பட்ட போலீஸ் அதிகாரியை பலர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.