“8 போலீஸாரை சுட்டுக்கொன்ற உ.பி. டான்”.. “19 வருஷத்துக்கு முன்னாடி செஞ்சது என்ன தெரியுமா?”.. சினிமாவை மிஞ்சும் மிரட்டல் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநேற்று இரவு கான்பூரில் டிஎஸ்பி, 3 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸாரை பலியாக்கியவர், ‘உத்தரப் பிரதேச டான்’ என்றழைக்கப்படும் விகாஸ் துபே. 19 வருடங்களுக்கு முன் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த அம்மாநில அமைச்சரையே சுட்டுக் கொன்றவர்தான் இந்த இந்த விகாஸ் துபே என்பதுதான் தற்போதைய அதிரவைக்கும் தகவலாக உள்ளது.

உ.பி. கான்பூரின் ஊரகப்பகுதியான சவுபேபூர் காவல்நிலையப் பகுதியின் விக்ரு கிராமத்தை சேர்ந்த விகாஸ் துபே. சொந்த பகை காரணமாக அப்பகுதியின் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரான சித்தேஷ்வர் பாண்டே என்பவரது கொலை வழக்கில் முதன்முறையாக சிக்கினார். அதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஆனால் பின்னர் ஜாமினில் வெளிவந்தவர் தொடர்ந்து உ.பி.யில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டு பெரும் டானாக உருவெடுத்தார்.
திரைப்பட டான்களை மிஞ்சும் அளவுக்கு 19 வருடங்களுக்கு முன், அப்போதைய பாஜக ஆட்சியின் மாநில இணை அமைச்சரான சந்தோஷ் சுக்லாவை காவல்நிலையத்திலேயே நுழைந்து இவர் செய்த கொலை பெரும் பரபரப்பிற்கு உள்ளானதை அடுத்து உ.பி.யின் ‘டான்’ என்றழைக்கப்பட்டார் விகாஸ் துபே. அவ்வழக்கில் விகாஸுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லவில்லை என்பதால் விடுதலையாகி, பின்னர் கான்பூரின் இளைஞர்களையே தம் கும்பலில் சேர்த்து டான் ஆகிய விகாஸ் துபே கான்பூரின் நாகர் கிராமப்பஞ்சாயத்தின் தலைவர், முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களிலும் போட்டியிட முயன்றார்.
ஆனால் இவரிடம் சட்டவிரோதமான நவீனரகத் துப்பாக்கிகள் அதிகமாக இருப்பதாகவும், சுமார் 60 கிரிமினல் வழக்குகள் பதிவாகி தேடப்பட்டு வந்த இவரை பிடிக்க ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு தனது விக்ரு கிராமத்தின் ஒரு வீட்டில் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, இவரை பிடிக்க கான்பூரின் 3 காவல்நிலையப் போலீஸார் சென்றிருந்தனர். அப்போது இவர்களை கிராமத்தினுள் நுழைய முடியாத வண்ணம், பொக்லைன் வாகனத்தை திட்டமிட்டு நிறுத்தி தடுத்துள்ளார். இதையும் மீறி போலீஸார் ஊருக்குள் நடந்து சென்றபோது நடந்ததுதான் இந்த துப்பாக்கி சூடு. இதில் விகாஸ் கும்பலைச் சேர்ந்த 2 பேர் துப்பாக்கி சண்டையில் கான்பூர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மீதமிருந்தவர்கள் சம்பல் காடுகளில் புகுந்து தப்பியோடிவிட்டனர்.
இதில், 8 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதோரு, மேலும் 7 காவலர்கள் துப்பாக்கி குண்டுகளுடன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், விகாஸ் துபேயை பிடிக்க அம்மாவட்ட எஸ்எஸ்பியான பி.தினேஷ்குமார். ஐபிஎஸ் தலைமையில் மேலும் ஐந்து சிறப்பு படைகளும், உபி அதிரடிப்படையினரும் களமிறங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்
