கல்வி கடன் கட்ட சொல்லி டார்ச்சர்...! 'இன்ஜினியரிங் படிச்சும் ஒரு வேலை கிடைக்கலையே...' 'என்னால அப்பா, அம்மாவுக்கு பிரச்சனை...' இளைஞர் எடுத்த விபரீத முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கல்விக்கடன் செலுத்த முடியாததால் பெங்களுருவில் இருக்கும் தன் உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் வெங்கலம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் தன் பள்ளி படிப்பை முடித்து பொறியியல் பட்டப்படிப்பு படிப்பதற்காக வங்கியில் கல்வி கடன் வங்கியுள்ளார். அதன்பின் 4 வருடங்கள் பொறியியல் கல்லூரியில் படித்து பட்டமும் பெற்றார். ஆனால் படித்து முடித்ததும் அவருக்கு நிரந்தர வேலை கிடைக்கவில்லை.
தற்போது வரை தற்காலிக பகுதி நேர வேலை பார்த்து வந்த பாண்டுரங்கனை கல்விக்கடன் திரும்ப செலுத்த கோரி வங்கியில் இருந்து கேட்டுள்ளனர். இந்த நிலையில் கல்வி கடனை திரும்ப செலுத்தகோரி வங்கி தரப்பில் இருந்து தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த பாண்டுரங்கன் பெங்களூருவிற்கு வேலை தேடி சென்றுள்ளார். அங்கு அவரது அத்தை வீட்டில் தங்கியிருந்து வேலை தேடி வந்துள்ளார்.
மேலும் ஒரு நிரந்திர வேலை கிடைக்காத சூழலில் இருந்த பாண்டுரங்கன் குடும்பத்தாரிடம் வங்கித்தரப்பில் இருந்து கடனை திருப்பி செலுத்துமாறு, தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். மேலும் கடனை திருப்பி செலுத்தாவிட்டால் போலீசில் புகார் கொடுக்கப் போவதாக வங்கி தரப்பில் மிரட்டியதாக கூறப்படுகிறது.
தான் படித்தும் ஒரு வேலை கிடைக்கவில்லை என்றும், தன்னால் தன்னுடைய குடும்பத்தார் போலீசில் சிக்க வேண்டியது வரும் என நண்பர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார், பாண்டுரங்கன்.
இதனையடுத்து வங்கியின் தொடர் அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தன்னுடைய முகநூல் கணக்கில் பதிவிட்டு, அத்தையின் வீட்டிற்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று, மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாண்டுரங்கனின் தற்கொலை பற்றி அறிந்த உறவினர்கள் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதைக்காக பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், உடலை சொந்த ஊரான வெங்கலம் கிராமத்திற்கு கொண்ட வந்தனர்.
வங்கியின் நெருக்கடியை பாண்டுரங்கன் தற்கொலை செய்வதற்கான காரணம் என்றும், வங்கி மீது நடவடிக்கை எடுக்காமல், பாண்டுரங்கனின் உடலை அடக்கம் செய்யமாட்டோம் என கூறி கிராம எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பாண்டுரங்கனின் உறவினர்கள் வங்கியின் மீது புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாண்டுரங்கனின் தற்கொலை சம்பவம் அக்கிராம மக்களை நிலைகுலைய செய்துள்ளது.
குறிப்பு: தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
