‘கொடுத்த கடனை திருப்பி கேட்ட நகைக்கடைகாரர்’.. நண்பருடன் சேர்ந்து ஜவுளிக்கடைக்காரர் செய்த கொடூரம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 06, 2019 01:55 PM

நாகை அருகே நகைக்கடை உரிமையாளரை, ஜவுளிக்கடை உரிமையளார் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pawnshop owner killed by textile shop owner in Nagapattinam

மயிலாடுதுறையை சேர்ந்த ஜித்தேந்திர்குமார் என்பவர் திருமருகல் கடைத்தெருவில் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் வட்டிக்கு விடும் தொழிலையும் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி இரவு திருப்புகலூர் அருகே உடலில் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவம் நடந்ததில் இருந்து ஜித்தேந்திர்குமார் நகைக்கடைக்கு அருகில் உள்ள தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை மூடியே இருந்துள்ளது. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், ஜித்தேந்திர்குமாரிடம் இருந்து தினேஷ்குமார் 8 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஒரு வருடமாக வட்டியையும், அசலையும் கொடுக்காமல் தினேஷ்குமார் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜித்தேந்திர்குமார் அடிக்கடி தினேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று சத்தம்போட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் தனது நண்பர் தீபக் என்பவருடன் சேர்ந்து ஜித்தேந்திர்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சம்பத்தன்று இரவு ஜித்தேந்திர்குமார் கடையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது காரில் வந்த தினேஷ்குமார், தனது நண்பர் பணத்துடன் காத்திருப்பதாகவும், அங்கு வந்தால் திருப்பி தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி ஜித்தேந்திர்குமார் அவர்களுடன் காரில் சென்றுள்ளார்.

காரில் செல்லும்போதே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ்குமார் ஒரு கேபிலால் ஜித்தேந்திர்குமாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து சாலையில் போட்டுவிட்டு விபத்து நடந்ததுபோல் இருசக்கர வாகனத்தை அருகில் போட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் விசாரணையில் வெளியே வர, தினேஷ்குமார் மற்றும் அவரது நண்பர் தீபக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #KILLED #NAGAPATTINAM #PAWNSHOP #LOAN