'உங்க பேங்க் அக்கௌன்ட்ல காசு போடுறோம்'... 'அந்த லிங்கை தப்பி தவறி கூட கிளிக் பண்ணிடாதீங்க'... மொத்த பணமும் அபேஸ் தான்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 20, 2020 04:49 PM

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பினால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஒரு கும்பல் சுருட்டி வருவதாக சி.பி.ஐ எச்சரிக்கை செய்துள்ளது.

Corona : CBI issues alert against banking phishing software Cerberus

ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது மக்களிடையே தற்போது பரவலாக அதிகரித்துள்ளது. அதை வைத்தே இந்த மோசடி கும்பல் எளிதாக பணத்தை சுருட்டி வருகிறது. அதன்படி ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிற வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.அனுப்பப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை (லிங்க்) பதிவிறக்கம் செய்யச் சொல்வார்கள். நாமும் என்ன எது என யோசிக்காமல் பதிவிறக்கம் செய்தால், அதில் கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு உங்கள் வங்கிக் கணக்கில் பெரும் தொகை செலுத்தப் போகிறோம் என்று இருக்கும்.

இந்த ஆசை வார்த்தைகளை நம்பி யாராவது அந்த லிங்க்கை கிளிக் செய்து, அதனைப் பதிவிறக்கம் செய்தால், அடுத்த கணமே ந்த ஸ்மார்ட் போன் கட்டுப்பாடு, எஸ்.எம்.எஸ். அனுப்பிய மோசடி நபரின் கைக்குச் சென்று விடும். அதைக் கொண்டு வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண் உள்ளிட்ட அனைத்து ரகசியத் தகவல்களையும் அவர்கள் எளிதாகத் திருட முடியும். இதன் மூலம் அந்த நபருக்குத் தொடர்புடைய அனைவர் குறித்த விவரமும் அந்த எஸ்.எம்.எஸ். அனுப்பிய நபரால் எடுக்க முடியும்.

சத்தமில்லாமல் நடக்கும் இந்த மோசடியை ‘பாங்கிங் ட்ரோஜன் செர்பரஸ்’ என அழைக்கின்றார்கள். சர்வேதச அளவில் இந்த மோசடி நடப்பதாக இன்டர்போல் எச்சரித்துள்ளது. இதையடுத்து மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அனைத்து மாநில காவல்துறையினருக்கு எச்சரிக்கை செய்தியினை அனுப்பியுள்ளது.

உங்களது வங்கிக் கணக்கில் பணம் போடுகிறோம் என வரும்  கவர்ச்சியான குறுந்தகவல்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.