சிவ பூஜைகளில் தவறாமல் கலந்துகொள்ளும் கால பைரவர்.. பரவசத்துடன் பார்த்துச்செல்லும் பக்தர்கள்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்போது நாய் ஒன்று தவறாமல் கலந்துகொண்டு, பூஜை வேளைகளில் ஓலமிட்டும் வருவது, அங்கு வரும் பக்தர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வலசையூர் அருகே அமைந்துள்ளது அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோவில். இங்கே 18 அடி உயரத்தில் பிரம்மாண்ட லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவனுக்கு உகந்ததாக கருதப்படும் பிரதோஷம், அஷ்டமி, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். இதனை காண வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த சிறப்பு நாட்களில் சங்கு முழங்க ஆத்ம லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கோவிலில் வளர்ந்துவரும் நாய் ஒன்று சங்கு சத்தத்திற்கு இணையாக ஓலமிட்டு வருகிறதாம். மற்ற நாட்களில் வெளியே சுற்றித் திரியும் இந்த நாய், சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்களில் இப்படி ஓலமிடுவது மக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் இந்த கோவிலில் உள்ள ஆத்ம லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அப்போது, அங்கு வந்த நாய் படியின் மீது ஏறி நின்று ஓலமிட்டிருக்கிறது.
ஒருபக்கம் சங்கு முழங்க, மற்றொரு பக்கம் இந்த நாய் ஓலமிட அங்கிருந்த பக்தர்கள் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கின்றனர். பொதுவாக இந்துமத நம்பிக்கையின்படி நாய் காலபைரவரின் வாகனமாக வணங்கப்படுகிறது. இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் போதெல்லாம் வந்து ஓலமிடும் இந்த நாயை பைரவரின் அம்சமாக கருதுவதாக மக்கள் தெரிவித்துவருகின்றனர்.
பல்வேறு சிவ ஆலயங்களில் இரவு பூஜை முடிவடைந்த பிறகு, கோவிலின் சாவியை பைரவரின் பாதத்தில் வைக்கும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் கால பைரவரின் வாகனமாக கருதப்படும் நாய் சிவனை வழிபடும் விதமாக பூஜையின்போது ஓலமிடுவது பக்தர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இதனிடையே, பூஜையின்போது நாய் படிக்கட்டில் நின்றபடி ஓலமிடும் வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.