APP மூலம் பழக்கம்.. மகனுக்காக இரண்டாம் திருமணம்.. "கல்யாணம் ஆகி ஒரு இரவை தாண்டுனதும் அரங்கேறிய அதிர்ச்சி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகேயுள்ள சாணாரப்பட்டி என்னும் இடத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 48). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளார். இதனிடையே, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக, செந்திலின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால், தன்னையும் தனது 12 வயது மகனையும் பார்த்துக் கொள்வதை கருத்தில் கொண்டு இரண்டாவது திருமணம் செய்யவும் செந்தில் முடிவு செய்துள்ளார்.
இதற்காக, தொடர்ந்து பெண் தேடியும் வந்துள்ளார் செந்தில். கணவரை இழந்து தனியாக இருக்கும் பெண்ணையும் செந்தில் தேடி வந்துள்ளார். அப்போது செயலி ஒன்றின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் செந்திலுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது.
அந்த பெண்ணும் கணவரை இழந்து வாழ்வதாக செந்திலிடம் கூறி உள்ளார். இதன் பின்னர், அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு செந்தில் பேச தொடங்கி உள்ளார். தனது பெயர் கவிதா என்றும், தனது கணவர் உயிரிழந்து விட்டதாகவும் அவரின் வீட்டாருக்கு நாங்கள் பணம் கொடுக்க உள்ளதால், என்னையும் எனது தாயாரையும் வீட்டில் அடைத்து வைத்துள்ளதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண்ணுக்காக பல கட்டமாக அவரது வங்கி கணக்கில் செந்தில் பணமும் செலுத்தி உள்ளார். தொடர்ந்து, சமீபத்தில் சேலம் வந்த அந்த பெண்ணை கோவில் ஒன்றில் வைத்து செந்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், அவரை வீட்டுக்கு அழைத்து வந்த செந்தில், செல்போன் ஒன்றை பரிசாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, திருமணமான அன்றைய தினம் இரவு, திடீரென அந்த பெண் உடல்நிலை சரியில்லை என கூறி உள்ளார். இதன் பின்னர், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் செந்தில். வீட்டுக்கு திரும்பி வந்ததும் சோர்வாக இருப்பதாக கூறி, அந்த பெண் தூங்கி உள்ளார். இதனிடையே, மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது அந்த பெண் காணாமல் போனதை அறிந்து குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார் செந்தில்.
அப்போது தான், வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றுடன் அந்த பெண் மாயமானதும் செந்திலுக்கு தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், அவரை அழைத்து கேட்ட போது அம்மா நினைவால் ஊருக்கு வந்து விட்டதாகவும், விரைவில் திரும்பி வருவதாகவும் செந்திலிடம் கூறி உள்ளார். ஆனால் நீண்ட நாட்களாக திரும்பி வராததால், அவர் ஏமாற்றி விட்டு சென்றுள்ளார் என்பது செந்திலுக்கு தற்போது தான் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக போலீசாரிடம் புகார் ஒன்றையும் செந்தில் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் இது பற்றி விசாரணை நடத்தியும் வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், கோவையிலும் இதே போல ஒரு நபரை அந்த பெண் ஏமாற்றி சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்மந்தப்பட்ட பெண்ணை தீவிரமாக தேடியும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்
