ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு ரூபாய் 2.6 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கியிருக்கிறார் சேலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

பைக் ஆசை
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சிறுவயது முதலே சேமிப்பில் ஆர்வம் கொண்ட பூபதி, விலை உயர்ந்த பைக்கை வாங்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அவர் சேகரித்த தொகை பத்தாயிரத்தை தொட்டிருக்கிறது. முழுவதும் ஒரு ரூபாய் நாணயங்கள். அப்போதுதான் சேகரித்து வைத்த சில்லறைக் காசுகளைக் கொண்டு ஏன் பைக் வாங்க கூடாது? என பூபதி நினைத்திருக்கிறார்.
இதனை அடுத்து கோவில்களில் இருந்து சில்லரை காசுகளை வாங்கியிருக்கிறார் பூபதி. இப்படி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயையும் ஒரு ரூபாய் நாணயங்கள் ஆக மாற்றி இருக்கிறார்.
சோதனை
முழுவதும் ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு பைக் வாங்க வேண்டும் என ஆசைப்பட்ட பூபதி இதற்காக பல பைக் ஷோரூம்களை நாடியுள்ளார். ஆனால் யாரும் பூபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மனம் தளராத பூபதி தொடர்ந்து முயற்சித்து ஒரு பைக் ஷோரூமை கண்டறிந்திருக்கிறார்.
கைகூடிய கனவு
இதனை அடுத்து முழுவதும் ஒரு ரூபாய் நாணயங்களாக இருந்த 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை மூட்டைகளில் கட்டிக்கொண்டு பைக் வாங்க சென்றிருக்கிறார் இந்த வினோத இளைஞர். அங்கே தனது நண்பர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களுடன் அமர்ந்து தான் சேகரித்து வைத்திருந்த நாணயங்களை எண்ணி முடித்திருக்கிறார். இதற்காக பத்து மணி நேரம் செல்ல விட்டதாக கூறுகிறார் அவர்.
இது குறித்து அவர் பேசும்போது," எனக்கு பைக் வாங்க வேண்டுமென்று நீண்ட காலமாகவே ஆசை இருந்தது. அதற்காக சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தேன். ஒரு ரூபாய் நாணயங்களாகவே பத்தாயிரம் ரூபாயை சேர்த்துவிட்டேன். அதன்பிறகு ஐந்து ரூபாய் நாணயங்களை சேகரித்தேன். அதன் பிறகு ஏன் எல்லா நாணயங்களையும் ஒரு ரூபாய் நாணயங்களாகவே சேர்க்கக்கூடாது? என தோன்றியது. பின்னர் அந்த முயற்சியில் இறங்கினேன். இதற்காக கோவில்கள், வங்கிகள் மற்றும் கடைகளில் பணங்களை கொடுத்து ஒரு ரூபாய் நாணயங்களை பெற்றேன். இதற்கு 3 மாதங்கள் ஆகின. அம்மாபேட்டையில் உள்ள பைக் ஷோரூம் மேனேஜர் ஒருவர் என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். சிறுக சிறுக பணம் சேமிப்பது எவ்வளவு கடினமானது என்பதை பிறருக்கு உணர்த்தும் வகையில் இதை செய்தேன். பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு என்னுடைய பைக் வாங்க வேண்டும் என்ற ஆசையை இப்போது பூர்த்தி செய்து உள்ளேன்" என்றார் மகிழ்ச்சியாக.
2.6 லட்சம் ரூபாயை ஒரு ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து இளைஞர் ஒருவர் பைக் வாங்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

மற்ற செய்திகள்
