'தடபுடலான ஏற்பாடுகள்'... 'எளிமையாக நடந்த தினகரன் மகள் நிச்சயதார்த்தம்'... 'மாப்பிள்ளை குறித்த தகவல்கள்'...வைரலாகும் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டி.டி.வி தினகரனின் மகள் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் திருமணம் செய்வதற்காக இருதரப்பிலும் பேசி முடிவு செய்திருந்தனர். இதையடுத்து திருமணத்திற்கான வழக்கமான நடைமுறைகள் முடிந்த நிலையில், சசிகலா தலைமையில் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பல காரணங்களால் சசிகலா விடுதலையாவது தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால், தற்போது நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொண்டு சசிகலா விடுதலையான பின்னர் அவர் தலைமையில் திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நவம்பர் 11-ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்ததுடன், குறைந்த அழைப்பிதழ்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டு மிகவும் நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன.
சுவாமிமலை அருகேயுள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் எளிய முறையில், அதே நேரத்தில் பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. நிச்சயதார்த்த விழாவிற்கு இருவீட்டார் தவிர, நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக ரிசார்டில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு மின்னொளியில், அலங்கார நுழைவுவாயில் அமைக்கப்பட்டது. இதில் தினகரன் தம்பி பாஸ்கரன், இளவரசி மருமகன் டாக்டர் சிவக்குமார், அ.ம.மு.க-வின் பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெங்கசாமி என மொத்தமே 60 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
நிச்சயதார்த்த விழா பாரம்பரிய வழக்கப்படி நடைபெற்றது. இதனால் மேடையில் தினகரனின் மகள் ஜெயஹரிணி மட்டும் அமரவைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறவினர்கள் சந்தனம், பொட்டுவைத்து வாழ்த்தினர். மகளுக்கு நல்ல படியாக நிச்சயதார்த்தம் முடிந்ததையடுத்து தினகரன் கடும் உற்சாகத்தோடு காணப்பட்டார். அ.ம.மு.க-வின் தஞ்சை மாநகரச் செயலாளரான ராஜேஸ்வரன், தினகரன் தரப்பில் அனைத்து வேலைகளையும் முன்னின்று நடத்தினார்.
திருமண தேதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், சசிகலா விடுதலை குறித்து உறுதியான தகவல் வெளியான பிறகே திருமண தேதி குறிக்கப்படும் எனத் தெரிகிறது. மணமகனின் குடும்பமானது தஞ்சாவூரில் பாரம்பரியமிக்க குடும்பம் என அனைவராலும் அறியப்பட்ட பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பம் ஆகும். இவரின் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர்.
தற்போது தெற்கு மாவட்டத் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய மகன் ராமநாதன் துளசி அய்யா தற்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.