'ஒற்றைத் தலைமை வேணும்' .. 'பதவிங்குறது கேட்டு வர்றது இல்ல'... திமுகவில் இணைந்த 'தங்கத்தமிழ்ச் செல்வன் அதிரடி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 28, 2019 01:08 PM
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தங்கத்தமிழ்ச்செல்வன் தன் ஆதரவாளர்களுடன், இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக-வில் அதிரடியாக இணைந்துள்ளார்.
திமுகவில் இணைந்த பின்னர் தங்கத்தமிழ்ச்செல்வன் பேசும்போது, கடுமையான உழைப்பாளி என்றும், கலைஞர் இறந்த நாளில் நீதிமன்றம் சென்று மெரினாவில் இடம் பெற்றவர் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமமுக-வின் ஒருங்கிணைப்பாளர்களில் முக்கியமானவராக இருந்த தங்கத்தமிழ்ச்செல்வனுக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே எழுந்த கருத்து முரண்பாடு காரணமாக, இருவருக்குமான வார்த்தைப் போர் தொடர்ந்தது. ஆனால் தங்கத்தமிழ்ச்செல்வன் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்று டிடிவி கூறியிருந்தார்.
முன்னதாக அதிமுகவில் தங்கத்தமிழ்ச்செல்வன் இணைவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று, அதிமுக தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார். பதவி குறித்து பேசிய தங்கத்தமிழ்ச்செல்வன் பதவி என்பது நாம் கேட்டுப் பெறுவதல்ல; அது நம் உழைப்பைப் பார்த்துக் கொடுக்கப்படுவது என்றும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு பலரும் வந்த பிறகும் அவர்களுக்கு திமுக நல்லதே செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதால், தான் திமுகவில் இணைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மட்டுமன்றி, ஒற்றைத் தலைமையில் இருக்கும் கட்சிதான் வெற்றிபெற முடியும் என்றும் அதனால்தான் திமுக பெருவெற்றி பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.