ஓ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை சின்னம்.. உச்சநீதிமன்றத்தில் சசிகலா சீராய்வு மனு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 24, 2019 03:43 PM

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து, சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

double leaves symbol sasikala files review petition in SC

இரட்டை இலைச் சின்னத்திற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ். தரப்பும் சசிகலா தரப்பும் போட்டிப்போட்டது. இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும், ஓ.பி.எஸ் தரப்பும் மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை ஓ.பி.எஸ். தரப்புக்கு ஒதுக்கியது.

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா, டி.டி.வி. தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது. தினகரன் – சசிகலா தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது. அதன்பின்னர்  இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதன்படி  உச்சநீதிமன்றத்தில் தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.  இந்த தீர்ப்பு தினகரன் – சசிகலா தரப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து அ.ம.மு.க. கட்சியை துவங்கிய தினகரன், அக் கட்சியின் சார்பிலேயே கடந்த 18-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் அவரது வேட்பாளர்கள் களம் இறங்கினர்.

அதன்பின்னர்,  அ.ம.மு.க.வில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலாவுக்குப் பதில் தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சசிகலா ஓரங்கட்டப்படுகிறார் என்று தகவல்கள் வெளியாகின. மேலும் அ.ம.மு.க. தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியாக பதிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. மீதான உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருக்கிறார் என்ற காரணத்தால், அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்றார் என்று கூறப்பட்டது.

இதனையடுத்து நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச் சாலையில் டி.டி.வி.தினகரன், சசிகலாவை சந்தித்தார். இந்நிலையில் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ்.க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : #VKSASIKALA #TTVDHINAKARAN #TWOLEAVES #REVIEW #PETITION #SC