‘நான் என்ன அஜித்தா? எம்ஜியாரா?.. பணம் கொடுக்கவே விடமாட்றீங்களே.. அந்த 2 கட்சிதான் பணம் தர்றாங்க..’
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 18, 2019 04:06 PM
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக 12 மாநிலங்களில் இன்று தேர்தல் நிகழும் நிலையில், 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.

இந்த் தேர்தலில் வாக்களித்த டிடிவி தினகரன் பேசும்போது, ‘சட்டமன்ற தேர்தலிலேயே ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்போது, எதுக்காக நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு 1000, 500 ரூபாய் என ஆளுங்கட்சியினர் கொடுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களுக்குத் தெரிந்துவிட்டது ஜெயிக்கமாட்டோம்னு.
உள்ளங்கை நெல்லிக்கனி போல, தமிழ்நாட்டில் யாரேனும் பாஜகவுக்கு ஓட்டு போடுவார்களா? இதை அறிந்த அவர்களுக்கு அதிமுக கைக்கூலியாக இருந்து, ஜெயலலிதா அனுமதிக்க திட்டங்களை எல்லாம் அதிமுக அனுமதித்து வருகிறது. தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாஜகவை எப்படி மக்கள் ஜெயிக்க வைப்பார்கள்.
நாங்கள் எதார்த்தமானவர்கள் என்பது இளைஞர்களுக்குத் தெரியும், இல்லாவிடில் நான் என்ன அஜித்தா?, எம்ஜிஆரா, அம்மாவா? இப்படி தனித்து நிற்க என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.கே.நகரில் என்ன நடந்தது. நான் 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கானது. நீங்கள் எல்லாம் நக்கலாகக் கேட்பீர்கள். ஆனால் அதற்கான முகாந்திரமே தற்போது இல்லை.
திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும்தான் ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள். எங்களை எல்லாம் கொடுக்கவே விடமாட்டீங்குறீங்களே? மக்களே கொடுக்கச் சொன்னாலும் நாங்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம். தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் தமிழிசையின் அழுத்தம் காரணமாக ரெய்டு போயிருக்கலாம். ஆனால் அங்கு திமுக பணப்பட்டுவாடா செய்திருக்கக் கூடும்’ என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசியவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த வன்முறையை கண்டித்ததோடு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் படுமோசமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
