'எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல'... 'பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா எழுதிய கடிதம்'... பரபரப்பான அரசியல் களம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன்னுடைய வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்குக் கைப்பட கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ''தங்களுடைய 6 10 2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன். விவரங்களை அறிந்துகொண்டேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். கொரோனா பரவல் காரணமாகத் தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையை அளிக்கிறது. கொரோனா தொற்று பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.
விரைவில் தமிழக மக்களும், பிற மாநில மக்களும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு சகஜநிலை திரும்ப மனதார இறைவனைத் தினமும் வேண்டி வருகிறேன். கொரோனா காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 3வது வாரத்திலிருந்து நேர்காணல்களைக் கர்நாடக சிறைத்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர்காணல் அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி, “சிறைத்துறை, எனது நன்னடத்தை ‘ரெமிஷன்’ (தண்டனை குறைப்பு சலுகை) விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவு எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.
உத்தரவு எனக்குக் கிடைத்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதன்படி, அபராத தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும். கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பிறகும், சுப்ரீம் கோர்ட்டில் 14 2 2017 தேசிய தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக ‘கியூரேட்டிவ்’ மனுவை (சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் விசாரிக்க கோரும் குறைகள் தீர்க்கும் மனு) தாக்கல் செய்ய இயலுமா? என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வக்கீல்களிடம் உறுதி செய்யவும், அதுபற்றி டி.டி.வி.தினகரனிடம் ஆலோசித்துச் செயல்படவும்.
தங்களின் கடித இணைப்பில் அனுப்பிய இணையதள செய்தியைப் படித்துப் பார்த்தேன். எனக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு இணையதள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது. உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷம பொய் செய்தியை, உண்மை என நம்பி அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். நான் வணங்கும் இறைவனின் ஆசியோடும், என் உடன்பிறவா அக்காவின் (ஜெயலலிதா) ஆசியோடும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்.
சமீபத்தில் ஜெய் ஆனந்த் என்னை வந்து சிறையில் சந்தித்ததாகவும், பேசியதாகவும் என் நிலையைப் பார்த்து அதிர்ந்து போனதாகவும், “அத்தை நீங்கள் பத்திரமாக வெளியே வந்தாலே போதும். தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டில், நீங்கள் இனி நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். உங்களை எல்லோரும் நிறையப் புண்படுத்திவிட்டார்கள். இனிமேல் வருகின்ற காலமாவது நீங்கள் நிம்மதியா இருக்க வேண்டும்” என என்னிடம் சொன்னதாக அந்த இணையதள செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் ஒரு சதவீதம்கூட உண்மையில்லை.
எதிர்காலத்தில் என் விஷயத்தில் அரசியல் குழப்பங்களை வேண்டும் என்றே ஏற்படுத்த எண்ணுபவர்கள், ஊடகங்கள் வாயிலாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளியிடும் பட்சத்தில், உரியச் சட்ட விளக்கத்தினை என் சார்பாகத் தரவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை என் சார்பாக தாங்கள் எடுக்கவும் என இக்கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்'' என சசிகலா எழுதியுள்ளார். சிறையிலிருந்து விரைவில் சசிகலா வெளியே வர உள்ள நிலையில் அவர் எழுதியுள்ள இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
