'அத்திவரதரை தரிசிக்க'... 'ஆசையாக சென்ற குடும்பம்'... 'நடுவழியில் நிகழ்ந்த கோர சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 08, 2019 05:17 PM

அத்திவரதரை தரிசிப்பதற்காக காரில் சென்றபோது,  கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சாலைத் தடுப்பில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், தந்தையும், 3 வயது மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

devotees from tirupur met accident near dharmapuri

திருப்பூர் மாவட்டம் சிறுபூலப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவர், தனது 3 வயது குழந்தை விவன் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோருடன் அத்திவரதரை தரிசிக்க சொகுசு காரில் காஞ்சிபுரம் புறப்பட்டார். இவர்களோடு, சுப்புராஜின் நண்பர் மகேந்திரன் என்பவரும், அவரது மனைவி மற்றும் குழந்தையும் அதே காரில் வந்தனர். காரை, சுப்புராஜின் மனைவி கிருத்திகா ஓட்டியதாகத் தெரிகிறது. இந்நிலையில், புதன்கிழமையன்று காலையில், தருமபுரியை அடுத்த சேசம்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது.

மோதிய வேகத்தில் சாலை ஓர பள்ளத்தில் இரு முறை உருண்டு தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவன் விவன் மற்றும் அவனது தந்தை சுப்புராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நான்கு பேரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது தனது குழந்தையையும், கணவரையும் உயிரிழந்ததைக் கண்டு, கிருத்திகா கதறி அழுதது, காண்போரைக் கலங்கச் செய்தது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #DHARMAPURI #ATHIVARATHAR