ஐபிஎல் ஏலத்தில் அந்த 3 வீரர்களை ‘குறி’ வைக்கும் சிஎஸ்கே?.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் சென்னை அணி 3 வீரர்களை எடுக்க முயற்சிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மோசமாக சொதப்பிய சிஎஸ்கே, முதல் முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் சென்னை அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் போன்ற மூத்த வீரர்களை அணியிலிருந்து சிஎஸ்கே விடுவித்துள்ளது. அதேபோல் சுரேஷ் ரெய்னா, டு பிளசிஸ், அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர் போன்ற வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மாற்றாக ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்ய அணி நிர்வாகம் விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இன்று (18.02.2021) சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் மூன்று ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கே குறி வைக்கும் என கருதப்படுகிறது.
அதில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த வீரராக திகழ்கிறார். கடந்த சீசனில் இவரை 10 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. தற்போது அந்த அணியிலிருந்து கிறிஸ் மோரிஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். கிரிஸ் மோரிஸின் அடிப்படை விலை 75 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மாற்றாக கிருஷ்ணப்பா கவுதமை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயற்சிக்கும் எனக் கருதப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு இவரை ரூ.6.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதனை அடுத்து டிரேடிங் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு சென்ற கிருஷ்ணப்பா கவுதம், தற்போது அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவரின் அடிப்படை விலை 20 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீபக் சாஹர், லுங்கி நெகிடி போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களே அணியில் உள்ளதால், அனுபவம் வாய்ந்த ஒரு பவுலர் தேவை என்றால் உமேஷ் யாதவ் முதன்மையான தேர்வாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவரின் அடிப்படை விலை 1 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.