'தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையா?'. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சொல்வது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் கொரோனா புரட்டிப் போட்டு வரும் நிலையில் உலக நாடுகளில் இரண்டாவது அலை தொடங்கிவிட்டதாக ஆங்காங்கே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகிறதா என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது அவர் தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை இல்லை என மறுத்துள்ளார். மேலும் பேசிய ராதாகிருஷ்ணன் இந்திய பிரதமர் மோடி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பிசிஆர் சோதனைகள் நடத்தப்படுவதாக பாராட்டியுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசியவர், “ஒரு நாளைக்கு 50 ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டன. எனினும் தற்போதைய சூழலில் ஒட்டு மொத்த தமிழ்நாடு அளவில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கைகளை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. பாதிப்புகள் உண்டாகும் குறிப்பிட்ட மாவட்டங்களை நாம் பார்க்கவேண்டும்.
அந்த வகையில் குறுகலான தெருக்கள், நெருக்கடியான பகுதிகள் கொண்ட பெரிய மாநகரமான சென்னை, அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் நமக்கு எப்போதுமே சவாலானவைதான். இதைத் தவிர தற்போது நாம் தீவிரமாக கண்காணித்து வரும் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் கடலோர மாவட்டமான கடலூர், அரிதாக திருவண்ணாமலை ஆகிய பகுதிகள் தற்போதைய சவால்கள் நிறைந்த பகுதிகளாக விளங்குகின்றன” என்று தெரிவித்துள்ளார்.