'சென்னை மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்'... 'ஒரு ஏரியாகூட இப்போ அப்படி இல்ல'... 'மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் ஏதும் இல்லாத மாவட்டமாக சென்னை உருவாகியுள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதிக்க துவங்கியது. அதன்படி மே மாதத்தில் அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டன. அப்போது சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 1400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வந்தது.
அதன் பின்னர், ஒரு பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் முழுமையாக அப்பகுதியை கட்டுப்படுத்தாமல் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் குறிப்பிட்ட வீட்டை மட்டும் கட்டுப்படுத்துவது என நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதேபோல ஒரு பகுதியில் புதியதாக 5 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது.
இதையடுத்து சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது. ஜூன் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்தது. இந்த சூழலில் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறைந்து தற்போது நோய் கட்டுப்பாட்டு பகுதியே இல்லாத மாவட்டமாக சென்னை உருவாகியுள்ளது. தினமும் 400 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.