'வேணாம் சாமி, அந்த கதையே வேண்டாம்'...'இங்க போனாலே கொரோனா பாசிட்டிவ்'?... அச்சத்தில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 9 ஆயிரம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்கள். இந்த சூழ்நிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் அனுமதியைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கியது. அரசு வகுத்த விதிகளின் அடிப்படையில் கட்டணமாக ஒரு நாளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் (ஐசியூ) வரை வசூலிக்க அனுமதித்தது.

இதற்கிடையே அரசு வகுத்த விதிகளை மீறி அதிக கட்டணத்தைத் தனியார் மருத்துவமனைகள் வசூலித்தால் அங்கு மேற்கொள்ளப்படும் கொரோனா சிகிச்சைக்கான அனுமதியை அரசு ரத்து செய்கிறது. இருப்பினும் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து செய்திகள் வெளியாகும் மருத்துவமனைகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்ற தனியார் மருத்துவமனைகள் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது.
இந்நிலையில் கொரோனா இல்லாமல் பிறநோய்கள், விபத்து போன்றவற்றுக்குத் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால்கூட முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் பெரும்பாலும் கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவுகள் வருகின்றன. இது பொதுமக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு முடிவுகள் வரும் பட்சத்தில் முதல் 2 வாரத்துக்கு கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த பிறகே மற்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் பல லட்ச ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதன்காரணமாக கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக சில சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஒருநாளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உண்மையாகவே தொற்று இருக்கிறதா என உறுதிப்படுத்துவதில்லை'' எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் செல்வ விநாயகம், ''அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாகவசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொரோனா இருப்பதாகப் பொய் சொல்லி கட்டணம் வசூலிப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. அப்படி யாராவது புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
