'2 நாளுக்கு முன்னாடியே நாங்க கிளம்பியிருக்கனும்... ஆனா, இப்ப'... 'எங்க கூட வந்த 33 பேருக்கு கொரோனா வைரஸ்!'... 'சரியான சாப்பாடு இல்லாம'... எகிப்து நைல் நதியின் நடுவே தமிழர்களை கதறவைக்கும் கொரோனா!
முகப்பு > செய்திகள் > உலகம்எகிப்துக்கு சுற்றுலா சென்ற கோவை கிணத்துக்கடவை சேர்ந்த வனிதா ரங்கராஜ் உள்பட கொங்கு மண்டலத்தை சேர்ந்த 17 பேர் நைல் நதியில் கப்பலில் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில், சரணாலயம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் வனிதா ரங்கராஜ். இவரது கணவர் ரங்கராஜ். இவர்கள் வருடந்தோறும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
அந்த வகையில், வனிதா ரங்கராஜ் தனது கணவர் ரங்கராஜ் மற்றும் சென்னை, சேலத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 17 பேர் சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் 10 நாள் சுற்றுலாவாக கடந்த மாதம் 27-ந் தேதி எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் எகிப்துக்கு சுற்றுலா சென்ற 17 பேர் நைல் நதியில், கப்பலில் தவித்து வருகிறார்கள். இது குறித்து, திருமதி வனிதா ரங்கராஜ் அலைபேசி மூலம் கூறியிருப்பதாவது,
எகிப்து நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 5ம் தேதி நைல் நதியில் கப்பலில் சென்றோம். அந்த கப்பலில் 2 நாட்கள் தங்கிவிட்டு 7-ந்தேதி காலையில் வெளியே வர வேண்டும். அப்போது 6-ந்தேதி காலையில் திடீரென கப்பலில் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவ குழுவினர் கப்பலில் பயணித்த அனைவரையும் பரிசோதனை செய்தனர். இதில் எங்களுடன் வந்த என்ஜினீயர் உள்பட 33 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் எகிப்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாங்கள் சென்ற கப்பலை நைல் நதியிலேயே நிறுத்தி வைக்க எகிப்து அரசு உத்தரவிட்டது.
அத்துடன் அதில் இருந்து யாரும் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கொரோனா வைரஸ் இல்லையே, ஏன் எங்களை உள்ளே வைத்து இருக்கிறீர்கள் என்ற கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் நாங்கள் இருக்கும் கப்பலில் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே இருந்து வரும் உணவை மட்டுமே சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரட்தான் காலை உணவாக கொடுக்கப்படுகிறது. நாங்கள் அனைவருமே வயதானவர்கள் என்பதால் அவர்கள் கொடுக்கும் உணவு எங்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறோம்.
தற்போது நைல் நதி கரையில் உள்ள லக்சர் என்ற நகரத்தின் அருகே கப்பலில் தவித்து வருகிறோம். 15 நாட்கள் கப்பலிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் எங்களுக்கும், கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய அரசும், தமிழக அரசும் எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
