'தமிழகத்தில் 2 நாளில் குறைந்த கொரோனா பரவல்'... 'அதற்கு பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம்'... ராதாகிருஷ்ணன் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 2 நாளில் கொரோனா பரவல் சதவீதம் குறைந்து இருப்பதால் நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ''நாங்கள் இன்று ஸ்கிரீனிங் மையத்தில் ஆய்வு செய்தோம். இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகத் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரவும் வேகம் சற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இது ஒரு நல்ல அறிகுறி. ஆனால் இதையே நாம் நம்பிக்கொண்டு இருக்கக் கூடாது.
2 நாட்களிலேயே பரவல் வேகம் குறைந்துள்ளதால் மக்கள் முககவசம் அணிவது, பொது இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினால் மிகவும் அது பயனுள்ளதாக இருக்கும். பொதுமக்கள் அடுத்த சில நாட்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இந்த நேரத்தில் கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கொரோனாவால் இந்திய அளவில் திணறக்கூடிய நிலையைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மகாராஷ்டிராவை விட 5-ல் ஒரு பங்கு பாதிப்பு தான் இங்கு உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவை விடப் பாதி அளவு பாதிப்பு தான் இங்கு உள்ளது என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இது தவறான கருத்து. ஒருநாளில் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் 30 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். சென்னை மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிசோதனை செய்வதற்காக 200 ஆட்டோக்களை இயக்கி வருகிறோம். நோய் உறுதியானவர்களை 100 வாகனங்கள் மூலம் சென்னையில் உள்ள 12 ஸ்கிரீனிங் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்கள் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து எந்த அளவு பாதிப்பு இருக்கிறது என்று கண்டறிகிறார்கள்.
சாதாரண பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர வேண்டாம் என்று அறிவுறுத்தி சிகிச்சை பெற ஏற்பாடு செய்கிறார்கள். இந்த ஸ்கிரீனிங் சென்டரை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 2 நாளில் பரவல் சதவீதம் குறைந்து இருப்பதால் நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் இனி கொரோனாவை இறங்கு முகத்துக்குக் கொண்டுவர முடியும்.
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பவர்கள் வெளியே வரவும், அந்த பகுதிக்குள் பொதுமக்கள் செல்லவும் தடை விதித்து அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் கூடுதலாக 12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளார். இந்த வார இறுதிக்குள் 2 ஆயிரம் படுக்கைகள் தயாராகிவிடும்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மட்டுமின்றி இதர மருத்துவமனைகளையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளோம். தடுப்பூசி வீணாகிறது என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று மக்களிடம் கூவிக் கூவி சொன்னோம்.
அப்போது நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் தான் போட்டனர். 2 நாட்கள் மட்டுமே 2 லட்சம் பேர் போட்டனர். சில நாட்கள் 10 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளவர்கள் தான் போட்டனர். நேற்று 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் போட்டனர். பொதுமக்கள் அடுத்த ஒரு வாரம் முறையாக தங்களை அர்ப்பணித்து கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
ரெம்டெசிவிர் மருந்தைப் பலர் வெளி மாநிலத்திலிருந்து வாங்கி தமிழகத்தில் கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுக்க கீழ்ப் பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்கிறோம். இனி ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் இடங்களை அதிகப்படுத்த உள்ளோம்'' என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
