'நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணது பெரிய பாவமா'?... 'சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பிக்க நினைச்சா'... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருவரும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேல் மதுர மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குகன். மதுரமங்கலம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஞானப்பிரியா. கல்லூரி படிப்பை முடித்த இருவரும் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.
ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரு கட்டத்தில் ஞானப்பிரியாவிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இதனால் அவர் கடந்த ஏப்ரல் 1ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், ஏப்ரல் 7ம் தேதி சென்னை பெரியார் திடலில் இருவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு அதைப் பதிவும் செய்தனர்.
மறுபுறம் தங்கள் மகளைக் காணவில்லை என ஞானப்பிரியா பெற்றோர், சுங்குவார் சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சூழ்நிலையில் பிரபல ரவுடி ஒருவர் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக இளம்பெண் ஞானப்பிரியா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படியும் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே ஞானப்பிரியா குறிப்பிட்டுள்ள ரவுடி மீது கொலை, ஆள்மாறாட்டம், கட்டப் பஞ்சாயத்து, கொலை முயற்சி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 3 வாரங்களுக்கு முன்பு படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியில், தனது ஆதரவாளருக்கு நிலத்தை எழுதி வைக்கும்படி உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஐந்து நாட்களில் வெளியே வந்து தற்போது காதல் தம்பதிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புகாரின் பேரில் இருகுடும்பங்களிடையே ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.