'நண்பனின் மனைவி துடித்த அந்த காட்சி'...'தம்பி உன் மனசு இருக்கே'... 'ஆசை ஆசையாக வாங்கிய 22 லட்ச ரூபாய் காரை விற்ற இளைஞர்'... நெகிழ வைத்துள்ள சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மறுபக்கம் தேவ தூதர்களாகப் பலர் மக்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கொரோனா இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக டாடா குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்களும் கூட ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன. இதேபோல் சில தனிநபர்களும் தங்களால் முயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மும்பையின் மலாட் நகரில் வசிக்கும் ஷாஹனாவாஸ் ஷேக் 'ஆக்சிஜன் மேன்' என்று அந்தப் பகுதியில் பிரபலமாக அழைக்கப்பட்டு வருகிறார். இந்த இக்கட்டான காலகட்டத்தில், மக்களுக்கு உதவுவதற்காக ஷாஹனாவாஸ் சில நாட்களுக்கு முன்பு தான் ஆசை ஆசையாக வாங்கிய ரூ.22 லட்சம் மதிப்புள்ள எஸ்யூவி காரை விற்றுள்ளார். காரை விற்றுக் கிடைத்த பணத்தில் ஷாஹனாவாஸ் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கினார்.
இதனைத் தனது இடத்தில் வைத்துள்ள அவர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி என்று கேட்டு அவரை தொடர்புகொண்டால், உடனே சிலிண்டரை கொண்டு டெலிவரி செய்து வருகிறார். மக்களுக்குச் சரியான நேரத்தில் உதவி வழங்க வேண்டும் என்பதற்காக, ஷாஹனாவாஸ் ஒரு குழு ஒன்றையும், ஹெல்ப்லைன் எண்ணையும் வெளியிட்டு ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்துள்ளார்.
கட்டுப்பாட்டு அறைக்கு யாரேனும் தொலைப்பேசியில் அழைத்தால் போதும், அவர்களுக்கு உதவி வருகிறார். கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 4000-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவிய அவரது குழு, சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நோயாளிகளுக்கு விளக்குவதையும் கடமையாக வைத்துள்ளார்கள்.
இதற்கிடையே கடந்த ஆண்டு, உடல்நலக்குறைவு காரணமாக இருந்த தனது நண்பரின் மனைவி ஆட்டோவில் செல்லும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டார். இந்த சம்பவம் ஷாஹனாவாஸை வெகுவாக பாதித்தது. அதன்பிறகு மும்பையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கல் முகவராக பணியாற்ற ஷாஹனாவாஸ் முடிவு செய்தார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு என்பது அதிகமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள ஷாஹனாவாஸ், ஒவ்வொரு நாளும் 500 முதல் 600 தொலைபேசி அழைப்புகள் ஆக்சிஜன் வேண்டி வருகின்றன என குறிப்பிட்டுள்ளார். நாம் வாழும் இந்த சமூகத்திற்கு ஏதாவது திருப்பி கொடுக்க வேண்டும் என நினைக்கும் ஷாஹனாவாஸ், நிச்சயம் ஒரு ரியல் ஹீரோ தான்.

மற்ற செய்திகள்
