வேற வழி இல்ல...! இந்த 'முடிவுகளை' இப்போதைக்கு எடுத்து தான் ஆகணும்...! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட HCL நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனமான HCL நிறுவனம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை சுனாமியாக பரவி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதலே தொழில்துறை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக ஐ.டி உள்ளிட்ட சில துறைகளில் வீட்டில் இருந்து பணியாற்றுவது வழக்கமாக மாறியிருக்கிறது.
சந்தை மதிப்பு அடிப்படையில் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனமாக இருந்த ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) நிறுவனம் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது அவசியம் என்பதால், சில முடிவுகளை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதில் குறிப்பாக வாடிக்கையாளர்களிடம் உரையாடுவதுதான் தங்களின் முக்கியமான பணி என்றும் அதற்காக மட்டுமே சில வாடிக்கையாளர் சேவைகளை இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஹெச்சிஎல் ஒரு சர்வதேச நிறுவனம். எங்கள் நிறுவனத்தில் மொத்த பணியாளர்களில் 30 சதவீதத்தினர் வெளிநாடுகளில் உள்ளனர்.
இன்றைய சூழலில் வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுகொள்ளும் வேகம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் வெளிநாட்டில் உள்ள பணியாளர்கள் சற்று கூடுதல் சுமையை ஏற்றுக்கொள்ள முடியும்.
வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்தியச் சூழலை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் நிலைமை மேம்படும்.
அதோடு ஒவ்வொரு அலுவலகத்திலும் தடுப்பூசி முகாம் அமைத்து, பணியாளர்களுக்குத் தரமான மருத்துவ சேவை கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்' என ஹெச்சிஎல் தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்
கூடுதலாக, தேவையைப் பொறுத்து, நடப்பு நிதி ஆண்டில் 20,000 பணியாளர்களை பணியமர்த்தவும் ஹெச்சிஎல் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சந்தை மதிப்பு அடிப்படையில் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனமாக இருந்த ஹெச்சிஎல் நான்காம் இடத்துக்கு சரிந்திருப்பதும், விப்ரோ மூன்றாவது பெரிய நிறுவனமாக உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.