‘ஊரடங்கில் நிறைய பேர் வெளியே சுத்துராங்க’!.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட ‘முக்கிய’ முடிவு.. முதல்வர் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நடந்த அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கபட்டுள்ளன.
![CM speech at consultative meeting of all assembly party leaders CM speech at consultative meeting of all assembly party leaders](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/cm-speech-at-consultative-meeting-of-all-assembly-party-leaders.jpg)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்னம், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமச்சந்திரன், மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். மதிமுக சார்பில் சின்னப்பா, பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னதுரை, நாகை மாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,‘ரெம்டெசிவிர் மருந்தின் தேவை கருதி சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தடுப்பில் தமிழக அரசின் பணியில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரிசா, மேற்கு வங்காளத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு பலன் கிடைத்துள்ளது. சிங்கப்பூர், தைவான் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் வரவழைக்கப்படுகிறது. நோய்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்க அரசாணை வெளியிடப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனை அடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது.
2. தொற்று பரவல் காலகட்டத்தில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகளை அனைத்துகட்சிகளும் முற்றிலுமாக நிறுத்துவது.
3. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற மக்களை அனைத்து கட்சிகளும் அறிவுறுத்துதல்.
4. தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கலாம்.
5. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது.
இந்த நிலையில் தமிழகத்தில் இனி ஊரடங்கு கடுமையாக கடைப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)