"கொரோனாவால் வாழ்வாதாரம் போச்சு"... 'நிதிச்சுமையில் தமிழகம்'... 'சவால்களை எதிர்கொள்ளும் புதிய நிதியமைச்சர்... யார் இந்த பழனிவேல்ராஜன்? - ஆச்சர்ய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 07, 2021 11:21 AM

தமிழகத்தின் நிதி அமைச்சராக பதவியேற்கும் பழனிவேல் தியாகராஜனுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

tamilnadu dmk new finance minister who is palanivel thiyagarajan

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் திமுக 133 சட்டமன்றத் தொகுதிகளை வென்றுள்ளதால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில், இன்று (07/05/2021) காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, பிற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டார்கள்.

இதற்கிடையே, தமிழகத்தின் நிதி அமைச்சராக பதவியேற்கும் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளார். அதற்கு மிக முக்கிய காரணம், தமிழகத்தின் நிதி நிலைமை. கொரோனா பேரிடர் காலத்தில் ஆட்சியமைக்கும் திமுகவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. இந்த கொடிய வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க லாக்டவுன் என்ற பொருளாதார பேரிடரை தமிழகம் சந்திக்க நேர்ந்தது. தொழில்துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுக்கு வருவாய் கணிசமான அளவு குறைந்துள்ளது. எனினும், மக்கள் நலத் திட்டங்களை அரசு கைவிடமுடியாது என்பதால் மாநிலத்தின் நிதிச்சுமை பலமடங்கு அதிகரித்துவிட்டது.

மேலும், இவ்வளவு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களை செயலாக்க வேண்டும். இதற்கு சரியான திட்டமிடலும், நிதியை திறம்படக் கையாண்டு தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் சாமர்த்தியம் கொண்ட நபரால் மட்டுமே முடியும். அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தேர்ந்தெடுத்திருக்கும் நபர் பழனிவேல் தியாகராஜன் ஆவார்.

மத்திய மதுரை சட்டமன்ற தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழனிவேல் தியாகராஜன், நீதிக்கட்சி சார்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.டி. ராஜனின் பேரனாவார். இவருக்கு மார்கரெட் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் முதன்முறையாகக் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மத்திய மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

கடந்த முறை தேர்தலிலும், அதன்பிறகு சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலத்திலும் மக்கள் மத்தியிலும், கட்சியிலும் நற்பெயரைச் சம்பாதித்திருந்த இவருக்கு, இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இத்தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், தற்போது தமிழகத்தின் நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1966 ஆம் ஆண்டு பிறந்த பழனிவேல் தியாகராஜன் வேதிப் பொறியியலில் தன் பட்டப்படிப்பைத் திருச்சி என்.ஐ.டி-யிலும், முதுநிலைப் பட்டப்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தார். பின்னர்,  நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் பொறியியல் உளவியலில் முனைவர் பட்டமும், எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் நிதி நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். 

படிப்பை முடித்த பிறகு, 1990-ல் செயல்பாடுகள் மற்றும் அமைப்பு மேம்பாடு தொடர்பான தொழிலில் ஈடுபட்ட அவர், 2001-ல், அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டுச் சேவை மேலாளராக பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விலகிய அவர், 2008 ஆம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஆனார். 

பின்னர் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பணிக்குச் சேர்ந்து, அந்த வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் உயர்ந்தார். 2014 ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகி, அரசியலில் ஈடுபடத் தொடங்கிய இவர், நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் சுமார் 20 ஆண்டுகள் சர்வதேச அளவிலான அனுபவத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை, கடன்சுமை ஆகியவற்றை இவர் திறம்பட கையாள்வார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamilnadu dmk new finance minister who is palanivel thiyagarajan | Tamil Nadu News.