'பல எம்எல்ஏக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு வந்திருக்கு'... 'தவறு செய்தால்'.... முதல்வர் ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக அரியணை ஏறியுள்ள நிலையில், அவர் முன்னால் பல கடுமையான சவால்கள் உள்ளன. தற்போது கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் அவர் முன்னால் இருக்கும் பெரும் சவாலாக உள்ளது. இதற்கிடையே ஆட்சியமைத்த பிறகு நேற்றைய தினம் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டம் நடந்துமுடிந்து அதிகாரிகள் வெளியேறிய பிறகு, முதல்வர் அமைச்சர்களுடன் தனியாக உரையாடி அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதில் அவரவர் துறையில் பணி நியமனங்கள் மற்றும் அமைச்சர்களின் பி.ஏக்கள் நியமனம்கூட வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர் அமைச்சர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதில், ''10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் மக்களிடம் நல்ல நிர்வாகத்தைக் கொண்டுசெல்ல வேண்டும். குறிப்பாகத் தொகுதியில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து நேரடியாக காவல்துறையிடம் தொடர்புகொள்ளக் கூடாது. காவல்துறை தன்வசம் உள்ளதால் நேரடியாகப் புகார்களை தன்னிடமே கூற வேண்டும். பல சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது.
அந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி உங்கள் துறையில் நன்றாகச் செயல்படுங்கள். மேலும், முறைகேடுகள் நடைபெறும் பட்சத்தில் அந்த அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்'' எனக் கடுமையான எச்சரிக்கையை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமைச்சர்களும் இந்த கருத்தை ஏற்று நடப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
