'உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த மாஸ்க்'... 'அதிலிருந்த வசனம்'... பதவி ஏற்பு விழாவில் நடந்த சுவாரசியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த மாஸ்க் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
![Udhanidhi Stalin mask got attraction in Stalin swearing function Udhanidhi Stalin mask got attraction in Stalin swearing function](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/udhanidhi-stalin-mask-got-attraction-in-stalin-swearing-function-1.jpeg)
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கொரோனா பரவல் காரணமாகச் சென்னை கிண்டி ராஜ்பவனில் இதற்கான பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகை வருகை தந்தார். பின்னர் பதவியேற்க உள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், மு.க.ஸ்டாலினுக்குத் தமிழக முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அத்துடன் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர். இந்த விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஸ்டாலின் குடும்பத்தினர், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், "மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியான தருணம். தமிழ்நாட்டுக்குத் தேவையான ஒரு விஷயம் நிகழ்ந்துள்ளது. எங்கள் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுகவினர் மக்களுக்கான பணியை ஆற்றுவார்கள்" எனத் தெரிவித்தார்.
அப்போது, அமைச்சரவையில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறதா என, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்கிறதா? எனக்கு இல்லை" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான விசிக தலைவர் திருமாவளவன், சி.பி.எம். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை உதயநிதி ஸ்டாலின், அவரின் குடும்பத்தாரோடு வரவேற்றார்.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த முகக்கவசம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் அணிந்திருந்த முகக்கவசத்தில், ''நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்'' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)