பேரறிஞர் அண்ணாவின் 'முழக்கத்தை'... தன்னுடைய 'அடையாளமாக' மாற்றிய 'முதல்வர் ஸ்டாலின்'!.. வேற லெவல் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினின் சமூக வலைதள பக்கங்களின் ப்ரொஃபைல் குறிப்புகள் வைரலாகி வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திமுக அரசின் பதவியேற்பு விழா இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
அதன்படி, தமிழ்நாட்டின் 8வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, அவருடைய சமூக வலைதள பக்கங்களில் உள்ள ப்ரொஃபல் விவரங்களை மாற்றியுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டின் முதல்வர் | திமுகவின் தலைவர் | திராவிட இனத்தைச் சேர்ந்தவர்" என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, "திராவிட இனத்தைச் சேர்ந்தவர்" என்ற வாசகம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பல வியூகங்களுக்கு வழி வகுத்துள்ளது. ஏனெனில், திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா முதன்முறையாக இந்திய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், "நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்" என்று முழங்கினார். இந்த முழக்கம் என்பது, மாநில சுயாட்சியை குறிப்பால் உணர்த்துவதாகவும், இந்தியா என்பது பல தேசிய இனங்களின் ஒன்றியம் என்பதை பிரதிபலிப்பதாகவும் அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, திமுகவினர் பலரும் இதை தங்களுடைய தாரக மந்திரமாக மாற்றிக்கொண்டனர். இத்தகைய நிலையில் தான், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன், அறிஞர் அண்ணாவின் முழக்கத்தை தன்னுடைய ப்ரொஃபல் குறிப்பில் மு.க.ஸ்டாலின் புதுப்பித்துள்ளார்.
மேலும், இன்று பதவியேற்பு விழாவில் பங்கேற்ற சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த மாஸ்க்கிலும் இந்த வாசகம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
