'கொரோனா நிவாரண நிதி'... '2000 ரூபாய் எப்போது முதல் வழங்கப்படும்'?... அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உள்ள 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ. 2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட இருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்நிலையில் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார்.
ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று தலைமைச்செயலகம் சென்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இந்த சூழலில் ரூ.4 ஆயிரத்தில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை தொடர்பாகப் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ''முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கியதைத் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மே 15 முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
இதையொட்டி இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வந்து ரேஷன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன் 12-ந்தேதி வரை வழங்கப்படும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு #COVID19 நிவாரண உதவித் தொகையாக ரூ.4000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
— M.K.Stalin (@mkstalin) May 10, 2021
மக்களின் வாழ்வாதாரம் காக்க முதல் தவணை ரூ.2000 மே மாதமே வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தேன். pic.twitter.com/ZjwcLuGm3Z