‘கிரிக்கெட்டில் தகராறு’!.. ‘1 கிமீ விரட்டிக் கொலை’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கிரிக்கெட் விளையாட்டில் நடந்த மோதலால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (23). இவர் கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வில்லிவாக்கம் தாதங்குப்பம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே ஷாஜகான் நடந்து சென்றுள்ளார். அப்போது ஷாஜகானை வழி மறித்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அரிவாளால் வெட்ட துரத்தியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷாஜகான் அவர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளார்.
ஆனால் வில்லிவாக்கம் சத்யா நகர் அருகே ஷாஜகானை மடக்கிய கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஷாஜகான் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஷாஜகானை மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு ஷாஜகானை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், ‘வில்லிவாக்கத்தில் உள்ள மைதானம் ஒன்றில் ஷாஜகான் மற்றும் அவரது நண்பர் பிரபு உட்பட பலர் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர். கடந்த ஆண்டு ஷாஜகான் கிரிக்கெட் விளையாடியபோது அதே பகுதியை சேர்ந்த சண்முகம், அஜீத், திவாகர் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் சண்முகம், அஜீத், திவாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும், ஷாஜகான் மற்றும் பிரபு ஆகிய இருவரும் சண்முகம், அஜீத் மற்றும் திவாகரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரில் ஷாஜகான், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதில் பழிக்குப் பழியாக ஷாஜகான் வெட்டிக்கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த கும்பல் ஷாஜகானை ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிக் கொலை செய்துள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’ என போலீசார் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலுக்கு பழிக்குப் பழியாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
