'ஊரடங்க நெனச்சு வருத்தப்படாதீங்க' ... "கர்ப்பிணி" பெண்களுக்கு இலவச 'கார் சேவை'! ... அசத்தும் 'சென்னை இளைஞர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 09, 2020 09:31 AM

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ என எந்த வித போக்குவரத்து சேவைகளும் இல்லாத நிலையில் சென்னை ஆவடியை சேர்ந்த லியோ ஆகாஷ் ராஜ் சென்னையிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வாகன சேவையை செய்து வருகிறார்.

Chennai youngster helps pregnant women by giving free car service

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இது வரை சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்களை தனது சொந்த காரில் இலவசமாக அழைத்துக் கொண்டு மருத்துவமனை சேர்த்துள்ளார் லியோ ஆகாஷ் ராஜ். அதில் இதுவரை சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. தொண்டு நிறுவனம் நடத்தி வரும் லியோ ஆகாஷ் ராஜ், இரவு நேரமாக இருந்தாலும் அழைப்பு வந்தால் உடனடியாக கிளம்பி சென்று உதவி செய்து வருகிறார்.

இதுகுறித்து லியோ ஆகாஷ் ராஜ் கூறுகையில், 'இந்த சேவைக்காக நான் மட்டுமில்லாமல் எனது நண்பரின் காரும், பிறகு ஒரு ஆட்டோவையும் பயன்படுத்தி வருகிறோம். சென்னை முழுவதும் இந்த சேவையை செய்து வரும் நிலையில் ஒரு நாளுக்கு கிட்ட தட்ட 30 அழைப்புகள் வரை எங்களுக்கு வருகிறது' என தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சமயத்தில் லியோ ஆகாஷ் ராஜின் சேவையை குறித்து கர்ப்பிணி பெண்கள் கூறுகையில், 'ஊரடங்கு சமயத்தில் இப்படி ஒரு உதவி என்பது எங்களை போல கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆன்லைன் மூலமாக தான் லியோவின் தொலைபேசி எண் எங்களுக்கு கிடைத்தது. தொடர்பு கொண்டு பேசிய சில மணித்துளிகளில் உடனடியாக வந்து உதவி செய்தார்' என்கின்றனர்.

மிகவும் கடினமான ஒரு சூழலில் கர்ப்பிணி பெண்களுக்கு லியோ ஆகாஷ் ராஜ் செய்து வரும் இலவச வாகன சேவை மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது. சென்னை கர்ப்பிணி பெண்கள் இலவச கார் சேவைக்கு 9600432255/ 7358305635 என்ற எண்ணிற்கு லியோ ஆகாஷ் ராஜை தொடர்பு கொள்ளலாம்.