'உயிரிழந்த' மருத்துவரை 'அடக்கம்' செய்த நண்பர்... "டாக்டரை ஹீரோவா பாக்க வேணாம்"... "மொதல்ல சக மனுஷனா பாருங்க"... கண்ணீர் மல்க வேண்டும் சைமனின் நண்பர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 22, 2020 08:51 AM

சென்னையிலுள்ள மருத்துவர் சைமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஆம்புலன்சில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

Friend of Doctor Simon become emotional and request people

இதனால் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை வேலங்காடு இடுகாட்டில் டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்தனர். அப்போதும் எதிர்த்த 20 நபர்களை போலீசார் கைது செய்தனர். பிறகு, மருத்துவரின் குடும்பம் கூட இல்லாமல் அவரது உடலை புதைத்தது அவரது நண்பரும் மருத்துவருமான பிரதீப் குமார் தான். மருத்துவரின் உடலை புதைக்க சென்ற போது மக்கள் எதிர்த்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மருத்துவர் பிரதீப் குமார் கூறுகையில், 'சைமனின் உடலை புதைக்க வேலங்காடு சுடுகாடு சென்று குழி தோண்ட ஆரம்பித்ததும்  அங்குள்ள மக்கள் எங்கள் அனைவரையும் தாக்க ஆரம்பித்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று அவரை சிகிச்சைக்கு சேர்த்தோம். பிபிஇ உடையில் இருந்த நான் ஆம்புலன்ஸை ஓட்டிக் கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தேன். ஜேசிபி இயக்க யாரும் இல்லாத காரணத்தால் மண்வெட்டி கொண்டு குழி தோண்டி கையால் மண்ணள்ளி வெளியில் இட்டு பின்னர் அடக்கம் செய்தோம்' என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 'கொரோனா மட்டுமல்லாது ஹெச்ஐவி, காச நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தாலும் டாக்டர்களுக்கு நோய் பரவும் அபாயம் உண்டு. ஆனால் நாங்கள் அதனை பொருட்படுத்தாது சிகிட்சையளிக்கிறோம். மக்கள், டாக்டர்களாகிய எங்களை ஹீரோவாக பார்க்க வேண்டாம். சக மனிதனாக பார்த்தால் போதும். பலரை காப்பாற்றிய மருத்துவரின் உடலுடன் காத்து நின்றது வேதனையளிக்கிறது. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது' என தெரிவித்துள்ளார்.