ரொம்ப ரொம்ப ‘RARE’.. இந்த எக்ஸாம்ல இவ்ளோ ‘மார்க்’ எடுக்குறது சாதாரண விஷயமில்ல.. திரும்பிப் பார்க்க வச்ச சென்னை மாணவர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படிக்க நடத்தப்படும் சாட் தேர்வில், சென்னையை சேர்ந்த மாணவர் 1600-க்கு 1600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அனுஜ் அஹூஜா. இவரது மகன் ஆரவ் அஹூஜா. இவர் ஏ.பி.எல் குளோபல் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வெளிநாட்டுப் பல்கலை கழகங்களில் படிக்க ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் சாட் (SAT) தகுதித்தேர்வில் 1600-க்கு 1600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். தான் 1550 மதிப்பெண்களே எதிர்பார்த்ததாகவும், ஆனால் 1600 மதிப்பெண் வாங்கியது தன்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் உலகின் முன்னணி கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை ஆரவ் அஹூஜா பெற்றுள்ளார். அமெரிக்காவின் மாஸசூட்டஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology), யேல் பல்கலைக்கழகம் ( Yale University) மற்றும் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridg) ஆகிய கல்லூரிகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். வான் இயற்பியல் (Astrophysics) துறையில் ஆர்வம் கொண்ட இவர், ஐஐடி பேராசிரியர் ஒருவருடன் இணைந்து கிளாஸிகல் மெக்கானிக்ஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆராய்ச்சி, பள்ளிப்படிப்பு, 6ம் வகுப்பு படிக்கும் தனது தங்கையின் படிப்பிற்கு உதவி செய்ததோடு மட்டுமல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக சாட் நுழைவு தேர்வுக்காகவும் தன்னை தயார்படுத்தி வந்ததாகவும் ஆரவ் அஹூஜா கூறியுள்ளார். தனக்கு ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) தான் முன்மாதிரி என பெருமையுடன் ஆரவ் தெரிவித்துள்ளார். இந்த சாட் நுழைவுத் தேர்வை எழுதிய 50 லட்சம் பேரில் 500 பேர் மட்டுமே 1600-க்கு 1600 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.