'நடிகர் ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்?’... ‘சகோதரர் சத்தியநாராயணா வெளியிட்ட தகவல்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் துவங்கிய ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு நடித்து வந்தார். இதற்கிடையில் அந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகடிவ் என வந்தாலும், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பல்லோ மருத்துவமனை இதுவரை வெளியிட்ட 2 அறிக்கைகளில் ரஜினிகாந்தின் ரத்த அழுத்த மாறுபாடு குறைந்து வருவதாகவும், தற்போது அவர் அவரது ரத்த அழுத்தம் சீராக வருவதாகவும், அவரது டிஸ்சார்ஜ் குறித்து விரைவில் மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா அவர்கள், ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்றுவரும் தனது சகோதரர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ரஜினியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.