‘இந்த ஆயிலை வாங்கி தர முடியுமா?’.. பேஸ்புக்கில் வந்த பெண்ணின் ‘மெசேஜ்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேஸ்புக்கில் பெண் போல பேசி சென்னை தொழிலதிபரிடம் பணத்தை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜோசப். இவர் ராயல் டிரேடிங் என்ற பெயரில் தொழில் வாய்ப்புகள் குறித்து பேஸ்புக்கில் பகிர்ந்து வந்துள்ளார். அப்போது அவரது பேஸ்புக் பதிவுகளை பார்த்து லண்டனைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் மெசஞ்சரில் அறிமுகமாகியுள்ளார். அவரது தொழில் வாய்ப்புகளை குறித்து விசாரித்த அப்பெண் பின்னர் அவரின் நிதி நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.
இதனை அடுத்து மும்பையில் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தும் போலிக் ஆயில் (Folic oil) கிடைப்பதாகவும், 32 லட்சம் ரூபாய்க்கு போலிக் ஆயிலை வாங்கி அனுப்பினால் 42 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய ஜோசப் லண்டன் பெண் சொன்னது போல போலிக் ஆயிலை வாங்கிக் கொடுக்க முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து மும்பையை சேர்ந்த சுனிதா என்ற பெண்ணை பேஸ்புக்கில் அறிமுகம் செய்து வைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சுனிதா சொன்ன வங்கிக் கணக்கில் 36 லட்சம் ரூபாயை ஜோசப் அனுப்பியுள்ளார்.
இதனை அடுத்த சில நொடிகளில் சுனிதா மற்றும் எலிசபெத்தின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. அவர்களை பலமுறை தொடர்பு கொண்டும் பலனளிக்காததால், காவல் நிலையத்தில் இதுகுறித்து ஜோசப் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி பேஸ்புக் பக்கம் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து வங்கிக்கணக்கு விவரங்களை வைத்து போலீசார் மும்பை விரைந்தனர்.
அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் ஜோசப்பிடம் சுனிதா மற்றும் எலிசபெத் என்ற பெயரில் பேசியது நைஜீரியாவை சேர்ந்த கிரிஸ்டோஃபர் வில்மர் என்பது தெரியவந்துள்ளது. இவர் இதேபோல் சென்னையில் 4 பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியது விசாரணையில் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.