புத்தாண்டு முதல் குப்பையைக் கொட்டுவதற்கு கட்டணம்.. சென்னை மாநகராட்சி ‘அதிரடி’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குப்பையைக் கொட்டுவதற்கு வீடுகளுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும், வணிக இடங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.7500 வரையிலும், உணவு விடுதிகளுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையிலும், திரையரங்குகளுக்கு ரூ.750 முதல் ரூ.2000 வரையிலும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துவோர் ரூ.5000 முதல் ரூ.20,000 வரையிலும், மருத்துவமனைகளில் ரூ.2000 முதல் ரூ.4000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் விதிகளை மீறி குப்பைகளை கொட்டுவோரிடம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால் ரூ.500 வரையிலும், கட்டிடக் கழிவுகளை கொட்டினால் ரூ.5000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க தவறினால் ரூ.5000 வரையிலும், குப்பைகளை எரித்தால் ரூ.2000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.