“சென்னை மக்கள் மறந்துட்டாங்க போல.. 2021-ஐ குடும்பத்தோட ஆரம்பிங்க.. ICU-வுடன் அல்ல!” - ‘அலெர்ட்’ செய்து ட்வீட் போட்ட சுகாதார நிபுணர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசென்னை மக்கள் கொரோனாவை மறந்து விட்டது போல தெரிவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் விஞ்ஞானியும் பொது சுகாதார நிபுணருமான பிரதீப் பிரதீப் கபூர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டே வருகிறது. இதனிடையே உருமாற்றத் திரிபு அடைந்த புதிய ரக கொரோனா வைரஸ் பிரிட்டானியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், இது உலகம் முழுவதும் அச்சம் மற்றும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக விமானம் மூலம் சென்னை வந்த நபர் ஒருவருக்கு இன்று காலை அவர் சென்னை விமான நிலையத்தில் கொரோனா உறுதியாகியுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார். இதனையடுத்து அந்த நபர் கிண்டியில் உள்ள கிங் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரை தாக்கியுள்ள கொரோனாவானது, மரபியல் மாற்றம் அடைந்த புதிய ரக கொரோனா வைரஸால் ஏற்பட்டதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் விஞ்ஞானியும், பொது சுகாதார நிபுணருமான பிரதீப் கபூர் இதுகுறித்து கூறும்போது, “கொரோனா நோயை சென்னை மக்கள் மறந்தே விட்டதாக தெரிகிறது. எங்கு பார்த்தாலும், குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகமுள்ள மால்கள் முதலான பகுதிகளில் மக்களை மாஸ்க் இல்லாமல் காண முடிகிறது,
Chennai citizens seem to have forgotten #COVID19. Crowds in malls without mask, crowded gatherings and and sense of complacency everywhere. Stay safe and follow #COVID19 appropriate behaviour to start 2021 in good health with family and not in the ICU !
— Prabhdeep Kaur (@kprabhdeep) December 21, 2020
அவர்கள் மாஸ்க் என்கிற ஒன்றையே மறந்துவிட்டனர். 2021 ஆம் ஆண்டினை, ஐசியுவில் அல்லாமல், குடும்பத்துடன், நல்ல ஆரோக்கியத்துடன் தொடங்குவதற்கான முறையான COVID19 தொற்று பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுங்கள்.!” என எச்சரித்துள்ளார்.