‘தொடர் கனமழை’!.. செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன..? அதிகாரிகள் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் காரணாமாக கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் நிலையான செம்பரம்பாக்கம் ஏரியிக்கு நீர்வரத்து ஒரு வாரத்துக்கு பின் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டியது. இதனை அடுத்து ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மழை குறைந்ததால் ஏரிக்கு வரும் நீர்வரத்து கணிசமாக குறைந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘நிவர்’ புயலாக மாறியுள்ளது. இந்த புயல் நாளை கரையை கடைக்க உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடியில், தற்போது நீர்மட்டம் 21.22 அடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெரிவித்த தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, ‘செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நிவர் புயல் சின்னம் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், எந்த நேரம் வேண்டுமானாலும் புயலாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.